சென்னை, ஜூன்.22-
அரசு கலைக் கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 1–-ந் தேதி முதல் 10–-ந் தேதி வரையில் முதற்கட்டமாகவும், கடந்த 12–-ந் தேதி முதல் 20-–ந்தேதி வரை 2-ம் கட்டமாகவும் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த 2 கட்ட கலந்தாய்வு முடிவில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட்டதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மீதமுள்ள இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் ஏற்கனவே வெளியிட்டு இருந்த கலந்தாய்வு குறித்த அட்டவணையில் அரசு கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 22-ந்தேதி (இன்று) முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று உயர்கல்வித் துறை அந்த தேதியை மாற்றம் செய்து, புதிய தேதியை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-–
அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 30–-ந்தேதி வரை இந்த மாணவர் சேர்க்கை நடைபெறும். அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.