செய்திகள்

இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும்: தலைமை செயலாளர் எச்சரிக்கை

சென்னை, ஏப்.10–

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கூறியுள்ளார்.

தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா நோய்த்‌ தொற்று பரவலைத் தடுக்க அரசால்‌ அனைத்து முயற்சிகளும்‌ எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்‌ தொற்று விகிதம்‌ மற்றும்‌ இறப்பவர்களின்‌ எண்ணிக்கை பிப்ரவரி 2021 வரை தொடர்ந்து குறைந்து வந்தது. தற்போது ஏப்ரல்‌ மாதத்தில்‌ சராசரியாக தினமும்‌ 3900 அதிகமான நபர்களுக்கு புதிய நோய்த்‌ தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

மாநிலம்‌ முழுவதும்‌ காய்ச்சல்‌ முகாம்கள்‌, நடமாடும்‌ காய்ச்சல்‌ முகாம்கள்‌, பரிசோதனை மையங்கள்‌ ஆகியவை ஏற்படுத்தப்பட்டு, நோய்‌ உறுதி செய்யப்படுபவர்கள்‌ உடனடியாக மருத்துவமனைகள்‌, சுகாதார மையங்கள்‌, கோவிட்‌ கவனிப்பு மையங்களில்‌ அனுமதிக்கவும்‌ அல்லது வீட்டில்‌ தனிமைப்படுத்துவதற்கும்‌ தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவிட்‌ சார்ந்த பழக்கங்களான முகக்கவசம்‌ அணிதல்‌, அடிக்கடி கை கழுவுதல்‌, சமூக இடைவெளி ஆகியவற்றை மீண்டும்‌ கடைபிடிக்க வலியுறுத்தப்படுவதோடு, அதனை மீறுபவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 16ந் தேதி முதல்‌ இதுவரை, விதிகளை மீறியதாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 667 நபர்கள்‌ கண்டறியப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.2 கோடியே 88 லட்சத்து 90 ஆயிரத்து 600 அபராதத்‌ தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

34.87 லட்சம் பேருக்கு தடுப்பூசி

கடந்த 8ந் தேதி வரை, 4 லட்சத்து 58 ஆயிரத்து 969 சுகாதாரப்‌ பணியாளர்கள்‌, 5 லட்சத்து 61 ஆயிரத்து 531 முன்களப்‌ பணியாளர்கள்‌, 45 வயது முதல்‌ 59 வயதிற்குட்பட்ட இணை நோய்‌ உள்ள 9 லட்சத்து 21 ஆயிரத்து 50 நபர்கள்‌, 45–59 வயதிற்குட்பட்ட இணை நோய்‌ இல்லாத 70 ஆயிரத்து 216 நபர்கள்‌, 60 மற்றும்‌ அதற்கு மேற்பட்ட வயதுடைய 11 லட்சத்து 14 ஆயிரத்து 270 நபர்களுக்கு முதல்‌ தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இரண்டாம்‌ தவணை தடுப்பூசி 2 லட்சத்து 12 ஆயிரத்து 517 சுகாதாரப்‌ பணியாளர்கள்‌, 81 ஆயிரத்து 685 முன்களப்‌ பணியாளர்கள்‌, 45 வயது முதல்‌ 59 வயதிற்கு உட்பட்ட இணை நோய்‌ உள்ள 25 ஆயிரயத்து 804 நபர்கள்‌ 45–59 வயதிற்குட்பட்ட இணை நோய்‌ இல்லாத 100 நபர்கள்‌, 60 மற்றும்‌ அதற்கு மேற்பட்ட வயதுடைய 40 ஆயிரத்து 894 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதுவரை 31 லட்சத்து 26 ஆயிரத்து 36 நபர்களுக்கு முதல்‌ தவணை தடுப்பூசி, 3 லட்சத்து 61 ஆயிரம் நபர்களுக்கு இரண்டாம்‌ தவணை தடுப்பூசி என மொத்தம்‌ 34 லட்சத்து 87 ஆயிரத்து 36 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தினசரி 3 ஆயிரம் காய்ச்சல் முகாம்

இதுவரை 2.01 கோடி மாதிரிகள்‌ பரிசோதனை செய்யப்பட்டுள்ளன, மாநிலம்‌ முழுவதும்‌ வீடு வீடாகச் சென்று கண்காணித்தல்‌, நடமாடும்‌ காய்ச்சல்‌ முகாம்கள்‌ உட்பட தினமும்‌ 3 ஆயிரம் காய்ச்சல்‌ முகாம்கள்‌ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம்‌ அணிதல்‌, சோப்பு போட்டு அடிக்கடி கை கழுவுதல்‌, சமூக இடைவெளியைக் கடைபிடித்தல்‌, வீட்டில்‌ தனிமைப்படுத்தும்‌ முறை போன்ற கோவிட்‌ சார்ந்த பழக்கங்கள்‌ பற்றி தீவிரமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மாநிலம்‌ முழுவதும்‌ கொரோனா நோய்‌ குணப்படுத்தும்‌ முறையில்‌ இந்திய முறை மருத்துவம்‌ ஈடுபடுத்தப்படுகிறது. பொது சுகாதாரம்‌ மற்றும்‌ மருத்துவ வல்லுநர்களோடு அடிக்கடி கலந்து ஆலோசித்து அவர்களின்‌ அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தப் பணிகளை முடுக்கிவிட ஏற்கனவே சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்‌ 15 களப்பணி குழுக்களும்‌ மற்றும்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ கண்காணிப்பு அலுவலர்களும்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌. இவர்கள்‌ அந்தந்த மாவட்டத்தில்‌ பதிவாகும்‌ தொற்று எண்ணிக்கையின்‌ அளவு, கோவிட்‌ பராமரிப்பு மையம்‌ தொடங்கப்பட்ட நிலை, அந்த மாவட்டத்தில்‌ தடுப்பூசி போடும்‌ நிலைமை மற்றும்‌ நோய்‌ கட்டுப்பாட்டுப் பணிகள்‌ மற்றும்‌ முகக்கவசம்‌ அணிதல்‌, கைகளைக் கழுவுதல்‌, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றை மாவட்ட கலெக்டர்கள்‌ மற்றும்‌ சென்னை மாநகராட்சி ஆணையருடன்‌ இணைந்து கண்காணிப்பார்கள்‌.

3 நாள் தடுப்பூசி திருவிழா

ஒரு காலவரையறைக்குள்‌, சுகாதாரப் பணியாளர்கள்‌, முன்களப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ 45 வயதிற்குமேல்‌ உள்ள அனைவருக்கும்‌ 100 விழுக்காடு தடுப்பூசி போடும்‌ பணியையும்‌ முடிக்க முடிவெடுக்கப்பட்டது.

குறிப்பாக ஏப்ரல்‌ 14 முதல் ஏப்ரல்‌ 16 வரை அந்தந்த மாவட்டத்தில்‌ தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையும்‌ எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

அரசு எடுத்து வரும்‌ மேற்கண்ட நடவடிக்கைகளின்‌ காரணமாக, தற்போது தமிழ்நாட்டில்‌ நோய்‌ தொற்று ஏற்பட்டவர்களில்‌ 95.55 விழுக்காடு நபர்கள்‌ குணமடைந்துள்ளனர் என்பதோடு, இறப்பு விகிதம் 1.41 விழுக்காடு என குறைவாக உள்ளது.

தமிழ்நாட்டில்‌ கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில்‌ கொண்டும், பொதுமக்களின்‌ நலன்‌ கருதியும்‌ தமிழ்நாடு அரசு, தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ 303் தேதி நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன்‌ ஊரடங்கை நீட்டித்துள்ளது. நோய்த்‌ தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு இன்று முதல்‌ முற்றிலுமாக தடை விதித்தும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன்‌ அனுமதி அளித்தும்‌ அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு

இந்த முயற்சியில்‌ பலன்‌ கிடைக்கவில்லை என்றால்‌ இரவு நேரத்தில்‌ கொரோனா ஊரடங்கு மற்றும்‌ கூடுதல்‌ கட்டுப்பாடுகள்‌ விதிக்க நேரிடும்‌.

தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்‌ தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும்‌ எடுத்து வருகிறது. இந்த கொரோனா தொற்று இரண்டாவது அலையைச் சமாளிக்க அரசு எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளுக்கும், பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு தர வேண்டும்‌ என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *