சென்னை, ஆக.10–-
அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் விதமாக இனி விடுப்பு எடுத்தால் செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் என மொத்தம் 9 லட்சத்து 48 ஆயிரத்து 522 மாநில அரசு ஊழியர்கள் உள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களின் ‘சர்வீஸ் பைல்கள்’ ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
அதேபோல் அரசு ஊழியர்கள் எடுக்கும் விடுப்புகள், சம்பள விவரங்கள் மற்றும் ஊழியர்களின் பணி அறிக்கைகள் ஆகியவற்றையும் டிஜிட்டல் முறையில் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.
அதற்காக கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை சார்பாக ‘களஞ்சியம்’ என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியில் தான் இனி விடுப்பு எடுப்பதற்கு தமிழக அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தர விட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு துறை ரீதியாக அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது மொபைலில் களஞ்சியம் செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் சுயவிவரம், விடுமுறை, சம்பள விவரம், பணி அறிக்கை ஆகியவற்றை சரி பார்த்து கொள்ள வேண்டும்.
மேலும் இனி வரும் காலங்களில் விடுப்பு எடுப்பவர்கள் இந்த களஞ்சியம் செயலியை பயன்படுத்தி விடுப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் முன்பணங்கள் சம்பந்தமாக அதாவது பண்டிகை முன்பணம், குறுகிய கால முன்பணம் போன்ற முன்பணம் விண்ணப்பங்கள் களஞ்சியம் செயலியின் மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும்.
அதில் ஏற்கனவே எடுத்த விடுப்புகளை நேவிகேஷன் பாத் பயன்படுத்தி பதிவிட்டு ஏற்பளிக்க வேண்டும். அப்போது தான் விடுப்பு விவரங்கள் முழுமையாக பதியப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
களஞ்சியம் செயலி
பயன்படுத்துவது எப்படி?
அரசு ஊழியர்கள், கூகுள் பிளே ஸ்டோர் மூலம் முதலில் களஞ்சியம் (KALANJIYAM) செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதில் தங்களது பணியாளர் எண் மற்றும் செல்போன் எண்ணை குறிப்பிட்டு லாகி-–இன் செய்ய வேண்டும்.
பின்னர் அதில் உள்ள சுய விவரங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும். அந்த செயலி மூலம் விடுப்பு மற்றும் முன்பணம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
அது தவிர அதில் சம்பள அறிக்கை, பணியிடை மாற்றம், பணி அறிக்கை, வருமான வரிக்கு பிடிக்கப்பட்ட தொகை என பல்வேறு விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் https://www.karuvoolam.tn.gov.in/ta/web/tnta/home என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.
அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி
இதுகுறித்து சில அதிகாரிகள் கூறியதாவது:-
செயலியில் தான் விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது ஊழியர்களுக்கு ஒரு கிடுக்கிப்பிடி தான். செயலி மூலம் விடுப்புக்கு ஊழியர்கள் விண்ணப்பிக்கும்போது, அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் இடத்தில் பணியில் இல்லாத ஊழியர்கள் விவரங்கள் செயலில் சரிபார்க்கப்படும். அவர் ஒருவேளை செயலியில் விடுப்புக்கு விண்ணப்பிக்காத பட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூட வாய்ப்பு உள்ளது.
அதே போல் அரசு ஊழியர்கள் போராட்ட காலத்தில் விடுப்புக்கு விண்ணப்பித்தால் அதனை செயலி மூலமே அரசு நிராகரித்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.