போஸ்டர் செய்தி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பற்றி அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும்

 

சென்னை, பிப். 11–
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கும் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், தென்னரசு (தி.மு.க.), பிரின்ஸ் (காங்கிரஸ்) ஆகியோர், போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
அவர் கூறியதாவது:–
தமிழ்நாடு அரசு 11.10.2017 அன்று ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு, மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஊதியத்தை 1.10.2017 முதல் அமல்படுத்தியது. இதனையடுத்து, புதிய ஊதியத்திற்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ– ஜியோ கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ஆண்டுதோறும் உயர்ந்து வரும் ஓய்வூதிய நிதிச்சுமையால், ஓய்வூதியம் தொடர்ந்து வழங்க இயலாத நிலை ஏற்படுவதுடன், அரசு ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட நிர்வாகச் செலவை ஈடுகட்ட முடியாத நிலை ஏற்படும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்த நிலையில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது. 2003–ம் ஆண்டிலேயே இதற்கான சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டு, மேற்கு வங்காளம் தவிர, மத்திய அரசு உட்பட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் அரசு சார்பில் 10 சதவிகிதமும், ஊழியர்கள் சார்பில் 10 சதவிகிதமும் பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதியம் நிதியத்தில் இருப்பு வைக்கப்பட்டு வருகின்றது. 2003–ம் ஆண்டுக்குப் பின் அரசுப் பணியில் சேர்ந்த அனைவருக்குமே புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி தான் தாங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளோம் என்ற விவரம் நன்றாகவே தெரியும். இருப்பினும், மதுரையில் நடைபெற்ற ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் 22.1.2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் செல்வது என முடிவு செய்தனர்.
பலமுறை பேச்சுவார்த்தை
இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, கூட்டமைப்பின் நிர்வாகிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி, அரசின் நிதிநிலை குறித்து எடுத்துக் கூறியும், போராட்டங்களைக் கைவிடக் கோரியும், அதற்கும் செவி மடுக்காமல் கூட்டமைப்பினர் தாங்கள் அறிவித்தபடி 22.1.2019 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22.1.2019 அன்று இக்கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மொத்தம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 757 பேரில், 2 லட்சத்து 10 ஆயிரத்து 500 பேர், அதாவது 28 சதவிகிதம் பேர் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தால் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படுவதால், வேலை நிறுத்தத்தை கைவிட உத்திரவிடக்கோரி கோகுல் என்ற மாணவர் தாக்கல் செய்த மனுவை 23.1.2019 அன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆசிரியர்களை உடனடியாக பணிக்குத் திரும்ப அறிவுறுத்தியது.
ஐகோர்ட் அறிவுரை
இதற்கிடையில் மாணவர் கோகுல், உயர்நீதிமன்ற அறிவுரைப்படி, ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பாமல் வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது குறித்து 25.1.2019 அன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டபோது, சென்னை உயர்நீதிமன்றம், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பது தங்கள் கருத்தாகும் என்றும், பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் அக்கூட்டமைப்பினர் பணிக்குத் திரும்பாமல், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
பொதுத் தேர்வுகள் நெருங்கும் நேரம் என்பதால், மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், நிர்வாக ரீதியாக பல நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வேறு வழியில்லாமல் மேற்கொண்டது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளை அரசின் நிதிநிலைக் காரணமாக, ஏற்க இயலாத நிலை குறித்த விரிவான ஓர் அறிக்கை ஒன்றினை 27.1.2019 அன்று பத்திரிகை செய்தி வாயிலாகத் தெரிவித்து, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டேன். இருப்பினும், இக்கூட்டமைப்பினர் 22.1.2019 முதல் 29.1.2019 வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது மாவட்டத் தலைநகர்களில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இளையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறியும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு, இயைூறு ஏற்படுத்தியதால் காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்தின்போது இதுபோன்ற மறியல்களில் ஈடுபட்டதற்காக இக்கூட்டமைப்பினர் மீது 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,521 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 1,656 பேர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
வழக்குகள் வாபஸ்
மேலும், 4,871 பேர் நீதிமன்றங்கள் முன்பு ஆஜர்படுத்தியபோது, நீதிமன்றங்களால் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டனர். வேலை நிறுத்தம் கைவிடப்பட்டவுடன், நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்ட 1,656 பேரும் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டனர். பொதுவாகவே, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், யார் போராட்டத்தில் ஈடுபட்டாலும் பொதுமக்களின் நலன் கருதி, இவ்வாறான கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில்தான் இந்த விஷயத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 29.1.2019 அன்று அரசு ஊழியர்களும், ஆசிரிய பெருமக்களும் தங்களுடைய போராட்டங்களை உடனடியாகக் கைவிட்டு, மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் 22.1.2019 முதல் நடத்தி வந்த தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்து, 30.1.2019 அன்று தங்கள் பணிக்குத் திரும்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்தும் அரசு ஆராய்ந்து முடிவு செய்யும். போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மையைப் பொறுத்து, அரசு பரிசீலித்து வருகிறது என்பதைத் தங்கள் வாயிலாக இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *