செய்திகள்

அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

Spread the love

சென்னை, ஜூன் 12–

அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர்க்கைக்கு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 22 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் 2019–2020–ம் கல்வியாண்டில் ஏற்படுகின்ற காலியிடங்களுக்கு புதியதாக மாணவ, மாணவியரை சேர்க்க பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரரின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியருக்கு இருப்பிடம், உணவு வசதி செய்து தரப்படும்.

இவ்விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் அவரவர் பயிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளின் காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்து விடுதி சேர்க்கை விண்ணப்ப படிவத்தை பள்ளி விடுதிகளுக்கு பள்ளி திறக்கும் நாளிலிருந்தும், கல்லூரி விடுதிகளில் கல்லூரி திறக்கும் நாளிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவத்தில் கோரியுள்ள ஆவணங்களுடன் 3 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், தங்களது குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றில் சுய சான்றொப்பமிட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்கள் பெற 044–25225657 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் சான்றொப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் பள்ளி மாணவ, மாணவியர் வருகின்ற 20–ந் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவ, மாணவியர் வருகின்ற 15.7.2019 க்குள்ளும் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *