லக்னோ, செப். 7–
அரசாங்கத்தை விட ஓநாய்கள் புத்திசாலியாக இருப்பதால் அவற்றை பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என உத்தரப்பிரதேச அமைச்சர் பேபி ராணி மவுரியா கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் மழைக்காலத்தால் ஓநாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த ஓநாய்கள் குடியிருப்புவாசிகளை தாக்கி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இப்பகுதியில் ஓநாய் தாக்குதல்களால், 7 குழந்தைகள் உட்பட 8 பேர் இறந்துள்ளனர். 36 பேர் காயமடைந்துள்ளனர். ஓநாய்களை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அரசைவிட ஓநாய்கள் புத்திசாலிகள்
இந்நிலையில் உத்தரப் பிரதேச அமைச்சர் பேபி ராணி மவுரியா, ஜான்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:–
‘அரசு சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஓநாய்கள் தேடப்பட்டு வருகின்றன. நாங்கள் அவற்றைப் பிடிப்போம். ஆனால் அவை அரசாங்கத்தை விட, ஓநாய்கள் புத்திசாலித்தனமாக இருப்பதால் அதற்கு நேரம் எடுக்கிறது. வனத்துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தேடுதலை மேற்பார்வையிடுகிறார்’ என பேபி ராணி மவுரியா தெரிவித்தார்.
ஓநாய்களை கண்காணிக்க அப்பகுதிகளில் 6 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. ஆளில்லா விமானங்கள் அங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆயுதப்படையை சேர்ந்த 150 பேர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறையைச் சேர்ந்த 32 குழுக்களும், வனத்துறையைச் சேர்ந்த 25 குழுக்களும் ஓநாய்களை பிடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் எனவும், குழந்தைகளை வெளியே விடவேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.