செய்திகள்

அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு கூட்டுறவுக் கடன் பெற முடியாத நிலை: தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

Makkal Kural Official

சென்னை, செப் 12

‘‘அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களை கூட்டுறவுச் சங்கக் கடன் கூட பெற முடியாத துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளியுள்ளது தி.மு.க. அரசு’’ என்று அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘தமிழ்நாட்டில் சாலை மார்க்கமான பயணிகள் போக்குவரத்தினை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவைகளாக அரசுப் போக்குவரத்து கழகங்கள் உள்ளன என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை லாபத்துடனும், சிறப்பாகவும் செயல்படுத்துவது உறுதிப்படுத்தப்படும்; மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் போன்ற வாக்குறுதிகள் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இந்த வாக்குறுதிகள் எதுவும் கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.

மாறாக, ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. ஓய்வு காலப் பயன்களான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி போன்றவற்றையே இரண்டு ஆண்டு காலம் கழித்து பெறக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்னும் முடிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தின் மூலம் கடன்கூட பெற முடியாத அவல நிலைக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் தங்கள் அவசர தேவைக்கு மேற்படி கடன் சங்கத்திலிருந்து பணம் பெற்றுக் கொண்டு வந்தனர்.

கடன் வழங்க முடியாத சூழ்நிலை

தற்போது, உறுப்பினர்களுக்கு கடன் வழங்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், இதற்கான காரணம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் உறுப்பினர்களின் கடனுக்கான தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்து அதனை போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்திற்கு செலுத்தாததுதான் என்று கூறப்படுகிறது. அதாவது, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையான 22 கோடி ரூபாயினை போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் செலுத்தவில்லை. இதன் காரணமாக, மத்திய கூட்டுறவு வங்கியிலும் கடன் பெற முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை பெற நீதிமன்றத்தை நாடும் சூழ்நிலை போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களிடமிருந்து பிடித்த கடன் தொகையை போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்திற்கு அளிக்காதது சட்டத்திற்கு புறம்பான செயல் ஆகும். தனியார் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய பொதுத் துறை நிறுவனமே இதுபோன்ற செயலில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.

கூட்டுறவு சிக்கன சேமிப்பு

போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தின்மூலம் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கடன் பெற வசதியாக, தொழிலாளர்களிடமிருந்து பிடிக்கப்பட்ட 22 கோடி ரூபாயினை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தி.மு.க அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *