சென்னை, அக். 25
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு காலப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பொதுவாக, அரசுப் பணியிலிருந்தோ, பொதுத் துறை நிறுவனங்களிலிருந்தோ அல்லது தனியார் நிறுவனங்களிலிருந்தோ ஓய்வு பெறும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, ஓய்வு பெறும் தினம் அன்றே, அவர்களுக்கு உண்டான வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஈட்டிய விடுப்பிற்கான ஊதியம் போன்றவை வழங்கப்படுவது வாடிக்கை. இவற்றை சட்டப்படி வழங்கவேண்டும். இவ்வாறு சட்டப்படி வழங்க வேண்டிய ஓய்வு காலப் பயன்களைக் கூட தி.மு.க. அரசு வழங்குவதில்லை.
சென்னையில் கார் பந்தயம், மெரினாவில் மு.கருணாநிதிக்கு மணிமண்டபம் போன்றவற்றிக்கெல்லாம் நிதியை ஒதுக்குகின்ற தி.மு.க. அரசு, 25 ஆண்டு காலம், 30 ஆண்டு காலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு காலப் பயன்களை வழங்க நிதியை ஒதுக்காதது வேதனை அளிக்கிறது. தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு காரணமாக, ஓய்வு பெறும் நாளன்று எந்தத் தொகையையும் பெறாமல் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மாத காலமாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு எவ்வித ஓய்வு காலப் பயனும் அளிக்கப்படவில்லை என்றும், ஏற்கெனவே ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்றும், இது குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், ஊதியக் குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை என்றும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படவில்லை என்றும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டக்காரர்களை
கைது செய்து…
இதுதொடர்பாக, அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நேற்று முன்தினம் போக்குவரத்துக் கழக ஓய்வூதிய அறக்கட்டளை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களை காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்துள்ளனர். ஆனால், அவர்களிடம் அரசு சார்பாக எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடத்தப் பெறவில்லை.
ஓய்வூதியப் பலன்கள் வழங்காததன் காரணமாக, பிள்ளைகளின் கல்விக்கும், திருமணத்திற்கும், தங்களுடைய மருத்துவச் செலவிற்கும் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, அதற்கான வட்டியையும் செலுத்தக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசுப் போக்குவரத்துக் கழகங்களே தொழிலாளர் விரோதப் போக்கைக் கடைபிடிப்பது இயற்கை நியதிக்கு முரணான செயல்.
முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தீபாவளிப் பரிசாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய ஓய்வு காலப் பயன்களை உடனடியாக வழங்கவும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை வழங்கவும், ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.