முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
‘‘சமூகத்தை பிளவுபடுத்துவோரை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்; எதிர்நீச்சல் போட்டு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம்’’
சென்னை, டிச 6–
தமிழ்நாட்டில் திராவிட மாடல் திமுக அரசுக்கு அவப்பெயர் உண்ணடாக்க நினைக்கும் சாதிவெறி மதவெறி சக்திகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
‘‘சமூகத்தை பிளவுபடுத்துவோரை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்; எதிர்நீச்சல் போட்டு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம்’’ என்று அவர் உறுதிபட கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற, தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்குதல் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:–
என் பாசத்துக்குரிய எழுச்சித் தமிழர் நம்முடைய திருமாவளவன் வைத்த கோரிக்கையை ஏற்று, அம்பேத்கர் மணிமண்டபத்தில், முழு உருவ வெண்கலச் சிலையை நான் திறந்து வைத்தேன். திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாசின் கோரிக்கையை ஏற்று, அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்து அதை வெளியிடக்கூடிய அறிவிப்பும் செய்யப்பட்டிருக்கிறது. செம்பதிப்பாக அது விரைவில் வெளிவரயிருக்கிறது. அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதுடன், நம்முடைய கடமை முடிந்துவிட்டதாக என்று நான் கருதவில்லை. சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்டோர் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிடவியல் கோட்பாடுகளை சட்டரீதியாக மாற்றி கொள்கைகளை ஆட்சி நெறிமுறைகளாக ஆக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக தொடர்ந்து உழைக்கிறோம்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் நிறைவேற்றாத, புதுமை திட்டங்களை நாம் நிறைவேற்றுகிறோம். சமூகநீதி வழியாக, சமத்துவ சமுதாயத்தை படைக்க பாடுபடுகிறோம்! நம்முடைய இலட்சிய பயண வழியில் ஒரு சில தடைகள், இடர்பாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. உடனே அதை மட்டும் சிலர் பெரிதுப்படுத்தி, அரசியலாக பார்க்க என்னென்ன பேசுகிறார்கள். “இதுதான் பெரியார் மண்ணா? இதுதான் அம்பேத்கர் மண்ணா?” என்று கேள்வி கேட்கிறார்கள்.
எதிர்நீச்சல் போட்டு லட்சியப் பயணம்
ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தை முழுமையாக புரிந்துக்கொள்ளாமல், அதில் அரசின் செயல்பாடுகளை தெரிந்துக்கொள்ளாமல், தெரிந்திருந்தாலும், திட்டமிட்டு வதந்திகளை பரப்பி, நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது; உங்கள் மதவெறி – சாதி வெறி எண்ணம் இந்த பெரியார் மண்ணில், அம்பேத்கர் கொள்கைகள் உரம் பெற்று இருக்கும் மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது, ஒருபோதும் நிறைவேறாது. இந்த ஸ்டாலின் இருக்கும் வரை உங்களால் அதை நிறைவேற்றவும் முடியாது.
தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கருமே தாங்கள் வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற பல நெருக்கடிகளை எதிர்கொண்டு, எதிர்நீச்சல் போட்டுதான் இலட்சியப் பயணத்தை தொடர்ந்தார்கள். அவர்களின் கொள்கை வழி நடக்கும் நம்முடைய அரசும், சமூகத்தில் நிலவும் இடர்பாடுகளை நீக்கி, சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, சமூகநீதிக் கொள்கையை நிலைநாட்டி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம்! இதுதான் தந்தை பெரியார் மீதும், புரட்சியாளர் அம்பேத்கர் மீதும் நாங்கள் எடுக்கும் உறுதிமொழி!
ஆதிதிராவிடர் பழங்குடியினர் விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றிய நான் ஐந்து இலக்குகளை குறிப்பிட்டேன்.
5 இலக்குகள்
முதல் இலக்கு, கல்வி, வேலைவாய்ப்பில் அவர்கள் உரிய இடங்கள் பெறவேண்டும்!
இரண்டாவது இலக்கு, சமூக அமைப்பில் அவர்கள் எந்தச் சூழலிலும் புறக்கணிக்கப்படக் கூடாது!
மூன்றாவது இலக்கு, எக்காரணம் கொண்டும் சாதியின் பெயரால் தடுக்கப்படக் கூடாது!
நான்காவது இலக்கு, அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகிய அனைத்து மட்டத்திலும் அவர்கள் வளர்ச்சி உறுதிசெய்யப்படவேண்டும்!
ஐந்தாவது இலக்கு, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும்!
இந்த சிந்தனைகள் கொண்ட அரசாகதான் தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படுகிறது! இனியும் செயல்படும்! செயல்படும்! என அம்பேத்கரின் நினைவு நாளில் உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.