மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஜூலை25-
அரசைப் பொதுவாக நடத்துங்கள். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-– மத்திய பட்ஜெட்டில் ஒரு சில மாநிலங்கள் நீங்கலாக பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
பிரதமர் மோடி அவர்களே… தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும் என்று சொன்னீர்கள். ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது. அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.