செய்திகள்

அரசியல் பேச வேண்டாம்: கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு அறிவிப்பு

Spread the love

நியூயார்க், ஆக. 26–

அரசியல் பேச வேண்டாம் என, தனது நிறுவன ஊழியர்களுக்கு கூகுள் குறிப்பாணை அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட கெவின் கெர்னெகீ என்ற என்ஜினீயர் சமீபத்தில், “2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதாலேயே நான் பணி நீக்கம் செய்யப்பட்டேன். அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் டிரம்பின் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டமிட்டு இருக்கிறது” என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறினார்.

இதனையடுத்து அந்த பேட்டியை, அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அனைத்தும் மிகவும் சட்டவிரோதமானது. நாங்கள் கூகுளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று ஒரு லட்சம் பணியாளர்களுக்கு மெமோ ஒன்றை அனுப்பியது கூகுள். அதில், “தகவல்கள் மற்றும் யோசனைகளை சக பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்வது ஒற்றுமையை வளர்க்கும், புதிய செய்தி குறித்து விவாதிப்பதோ, அரசியல் குறித்து பேசுவதோ அந்த நாளை மோசமாக்குமே அன்றி ஒற்றுமையை வளர்க்காது.

நமது முக்கியமான கடமை நாம் ஒவ்வொருவரும் எதற்காக இந்நிறுவனத்தில் எடுக்கப்பட்டிருக்கிறோமோ அதை செய்வதற்கே; வேலை சம்பந்தமில்லாதவற்றைப் பற்றி விவாதிப்பதற்கல்ல” என்று அந்த மெமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. “யாரையும் கேலி செய்யாதீர்கள், யாரைப் பற்றியும் பேசி தனிமனித தாக்குதல்களில் ஈடுபடாதீர்கள். உங்கள் சக பணியாளர்களிடம் மரியாதையாக பேசுங்கள் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் கூகுளில் பணியாற்றுவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. நமது தயாரிப்புகள், சேவைகளின் தனித்தன்மை மற்றும் நம்பிக்கை விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகள் எல்லாம் அதிகாரப்பூர்வமான கொள்கைகள்; அவைகள் எல்லாம் கூகுள் அலுவலகத்தில் பணியாற்றும் சமயங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் கூகுள் சந்தித்து வரும் அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *