செய்திகள்

அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி கடமை ஆற்றுங்கள்: கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் பதில்

Makkal Kural Official

சென்னை, அக்.19-

பிளவுவாத சக்திகளிடம் இருந்து விலகி அரசியல் சட்ட நெறிமுறைகளின் படி கடமை ஆற்றுங்கள் என்று தமிழக கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.

தமிழக கவர்னரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு, எனது கடும் கண்டனத்திற்கு பதில் அளித்துள்ள கவர்னருக்கு சில கேள்விகள்:

‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை? ‘பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்’ என விளக்கம் கொடுக்கும் கவர்னர் உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே. சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா?

‘ஒரு கவர்னருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது’ எனச் சொல்லியிருக்கிறீர்கள்.

தமிழ் எங்கள் இனம். அது எங்கள் உயிர்மூச்சு. தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்கு பெருமைதான்.

பா.ஜனதா அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவித் தமிழ்மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தைத் தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும், உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார் பிரதமர் மோடி எனச் சொல்லியிருக்கிறார் கவர்னர்.

தமிழைத் தலையில் தூக்கிப்போற்றுவதாக நீங்கள் கூறும் மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது? 2013–2014 முதல் 2022–2023ம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2 ஆயிரத்து 29 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2,435 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டதைவிட இரண்டரை மடங்கு அதிகம். இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது சம்ஸ்கிருதத்திற்குச் செலவிடப்பட்டதில் வெறும் 7 சதவீதம் மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டது.

அதுமட்டுமில்ல, கடந்த காலத்தில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா? தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்றும், திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான் என்றும் கூறியதை மறக்க முடியுமா?

திராவிட மாடல் காலாவதியான கொள்கை என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது?

தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள்? எனச் சொல்ல முடியுமா? தமிழ் மீது மத்திய பா.ஜனதா அரசுக்கு பற்றிருப்பது உண்மையானால், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது? பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்கள், தொடர்வண்டிகள், முன்வைக்கும் முழக்கங்கள் என ‘எங்கும் இந்தி, எதிலும் இந்தி’ என்ற கொள்கையுடன் இந்தியைத் திணிப்பது நீங்கள்தான்.

கவர்னராக பொறுப்பேற்றதிலிருந்து அரசியல்சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், கவர்னர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும், திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்? சட்டப்பேரவையில் நீங்கள் படிக்க வேண்டிய கவர்னர் உரையில் கூட திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி போன்ற பெயர்களைத் தவிர்த்தவர்தானே நீங்கள்? உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, திராவிட நல்திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?

அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

நீங்கள் கவர்னர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *