சென்னை, செப். 20
அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து சென்னைக்கு இன்று காலை நடிகர் ரஜினி வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினியிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் குறித்த கருத்தை செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு, அரசியல் கேள்வி கேட்காதீங்கனு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் என்று ரஜினி பதிலளித்தார்.
மேலும், வேட்டையன் திரைப்படம் நன்றாக வந்துள்ளதாகவும், இசைவெளியீட்டு விழாவில் யார்–யார் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்பது குறித்து சரியாக தெரியவில்லை என்றும் செய்தியாளர்களின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளித்து சென்றார்.
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர்கள் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.