செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கைவிட்ட தி.மு.க. அரசு

Makkal Kural Official

குற்றாலம், ஆக. 6–

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கைவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தென்காசி மாவட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை குற்றாலம் ஐந்தருவி பகுதியில் உள்ள இசக்கி ரிசார்ட் விடுதியில் தங்கிய அவர் முதல்கட்டமாக மாற்றத்திறனாளிகளுடன் சந்திப்பு நடைபெற்றது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயலற்று இருப்பதாகவும், குறிப்பாக, திட்டங்களின் மூலமாக தி.மு.க.வினர் மட்டுமே பயனடைந்து வருகிறார்கள் என மாற்றுத்திறனாளிகள் கருத்து தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகள் மனு கொடுப்பதற்கு சிரமப்படுவதை அறிந்த எடப்பாடி பழனிசாமி, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மனு வாங்கினார்.

அப்போது அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:–

அண்ணா தி.மு.க. ஆட்சியில் 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளிக்கு மின்சக்தியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடை உயர்த்திக் கொடுத்திருக்கிறோம்.

சென்னை மாநகரப் பேருந்துகளில் பார்வையற்றோருக்கு உதவ 10 வழித்தடங்களில் ஒலியெழுப்பும் சமிக்ஞை கருவி பொருத்தப்பட்டது. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதன்மை தேர்வை எழுதும் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்க 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அரசுப் பணிகளுக்குச் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயணப்படி 1,000 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இப்போது முறையாக கடைகளை ஒதுக்கவில்லை என்று சிலர் குறை கூறினார்கள். அண்ணா தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாற்றுத் திறனாளிகளுக்கு முறையாக கடைகளை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தணியைச் சேர்ந்த ஜோதி என்ற மாற்றுத் திறனாளியை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து நமது கழகத்தில் இணைந்தார். 1,000 பேருடன் நம் கழகத்தில் இணைந்த ஜோதியிடம் இப்போது 5000 உறுப்பினர்கள் செயல்படுகிறார். அவரை உங்களுடன் இணைத்து விடுகிறேன். அரசாங்கத்தில் எந்தெந்த உதவிக்கு யாரை அணுக வேண்டும் என்று அவர் சிறப்பாக வழிகாட்டுவார்.

கடினமான வாழ்வை மேற்கொள்ளும் நீங்கள் இந்த வாழ்க்கை போராட்டத்தில் வெற்றி பெற எனது அரசு அமைந்தவுடன் தேவையான உதவிகளை செய்து கொடுப்பேன். மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு முடிந்த அளவு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன். எத்தனையோ பேரை சந்தித்தாலும் உங்களை பார்க்கும்போதுதான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உடலில் குறை இருந்தாலும், உள்ளத்தில் நீங்கள்தான் முழுமை பெற்றவர்கள்…’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இதையடுத்து விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர் சங்கங்களுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெற்றது. அவர்கள் கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:–

அண்ணா தி.மு.க. ஆட்சியில் நீரை சேமிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீர் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தினோம். குடிமராமத்து திட்டம் மூலம் ஏரிகள், குளங்களை தூர் வாரினோம். அந்த வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு விலையில்லாமல் கொடுத்தோம். முதல்கட்டமாக 6 ஆயிரம் ஏரிகளில் தூர்வாரினோம்.

தடுப்பணை கட்டுவதற்காக நாங்கள் ஒரு குழுவை ஏற்படுத்தினோம். ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர், கண்கணிப்புப் பொறியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் தடுப்பணைகள், நதி, ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தனர். அதன் அடிப்படையில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் எங்கெல்லாம் தன்ணீர் தேக்க முடியும் என்று சர்வே செய்து வைத்திருந்தோம். ஆனால் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 2 ஆயிரம் கோடியில் தடுப்பணை கட்டப்படும் என்று கூறியிருந்தார்கள். அது அறிவிப்போடு போச்சு. அண்ணா தி.மு.க. ஆட்சியில் பவானி சாகரில் 7 தடுப்பணைகள் கட்ட பணிகள் தொடங்கிப்பட்டன. அந்த தடுப்பணைகளுக்கு நாங்கள் அதிக உயரம் குறிப்பிட்டிருந்தோம். அந்த உயரத்தை குறைத்துவிட்டதால் அது பிரயோஜனமில்லாமல் போய்விட்டது.

காவிரி ஆற்றிலும் 4 இடத்தில் தடுப்பணை கட்ட இடம் தேர்வு செய்து வைத்திருந்தோம். ஆனால் இந்த ஆட்சியில் அவை ரத்து செய்துவிட்டனர். ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகும் மக்களுக்கு பயன்தரும் திட்டங்களைத் தொடரவேண்டும். ஆனால் இந்த ஆட்சியில் நான் கொண்டு வந்த பல திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைவிட்டு விட்டார்கள்.

பாபநாசம்–மணிமுத்தாறு அணை இணைப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு விவசாயிகள் கோரிக்கைக்கு ஏற்ப அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலங்களில் அண்ணா தி.மு.க. அரசு தான் விவசாய கடன்களை 2 முறை ரத்து செய்தது. மும்முனை விவசாயம் வழங்கியது. பயிர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிக விவசாயிகள் அதிக இழப்பீடு பெற உதவினோம். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அண்ணா தி.மு.க. அரசு.

சிறு, குறு விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளீர்கள். விவசாயிகளுக்கு ஏற்கெனவே பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அம்மா இருக்கின்றபோதே சிறு குறு விவசாயிகளுக்கு என்னென்ன வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்ற விதியில் இருக்கிறது. விபத்து ஏற்பட்டால் உதவித் தொகை கொடுக்க வேண்டும் என்று அதில் இருக்கிறது. சிறு குறு விவசாயிகளுக்கு பசுமை வீடுகள், விலையில்லா ஆடுகள், கறவைப் பசுக்கள் என பல உதவிகள் அண்ணா தி.மு.க. அரசு செய்துள்ளது. ஆனால் இந்த அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை.

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அண்ணா தி.மு.க. ஆட்சியில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் குளங்களில் களிமண் அள்ளுவதற்கு உரிமை கொடுத்தோம். கைத்தறி நெசவாளர்களுக்கு உதவ 300 கோடி ரூபாய் ரிபேட் கொடுத்து தேங்கிய துணிகளை விற்க நடவடிக்கை எடுத்தோம். மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்

நான் ஒரு விவசாயி என்ற காரணத்தினால் விவசாயப் பணிகளுக்கு அண்ணா தி.மு.க. ஆட்சி வந்த பிறகு விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்படும். அதேபோல், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்’’ என்று உறுதி அளித்தார்.

இதுதவிர 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் 4 மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஸ்டெதஸ்கோப் வழங்கி கவுரவித்தார்.

இதைத்தொடர்ந்து மாற்றுக்கட்சியினர் எடப்பாடி முன்னிலையில் அண்ணா தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர்கள் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன், கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.க்கள் பிரபாகரன், சவுந்தரராஜன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *