செய்திகள்

அரசியல் கட்சியினர் வரைந்த 88 ஆயிரத்து 467 சுவர் விளம்பரம் அழிப்பு

சென்னை, மார்ச் 15–

இதுவரை அரசு கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் அரசியல் கட்சியினர் வரைந்திருந்த 88 ஆயிரத்து 467 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மிகக்கடுமையாக நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். அந்த அடிப்படையில், 3 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்திருக்கிறோம்.

அரசு சொத்துகளில் செய்யப்பட்டு இருந்த 64 ஆயிரத்து 385 விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. அதற்காக போலீஸ் மூலம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனியார் சொத்துகளில் செய்யப்பட்டிருந்த 24 ஆயிரத்து 82 விளம்பரங்கள் நீக்கப்பட்டன. அதுதொடர்பாக 875 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நகர்ப்புறங்களில் தனியார் மற்றும் அரசு சொத்துகளில் யாரும் தேர்தல் விளம்பரத்தை செய்யக்கூடாது. கிராமப்புறங்களில் மட்டும், தனியார் சொத்துகளில் அதன் உரிமையாளர் அனுமதியுடன் விளம்பரம் செய்யலாம்.

பணபட்டுவாடா மற்றும் பணத்தை கொண்டு செல்லும் பிரச்சினையில் வருமான வரித்துறையுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். மிகவும் உன்னிப்பாக கவனிக்கும்படி அவர்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.

மாநிலத்தின் அனைத்து விமான நிலையங்கள், பெரிய ரெயில் நிலையங்கள், ஓட்டல்கள், பண்ணை வீடுகள் போன்ற இடங்களையும், ஹவாலாவில் ஈடுபடும் நபர்கள், நிதி நிறுவன ஏஜெண்டுகள், கூரியர் செயல்பாடுகள், அடகு தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

சந்தேகத்துக்கு உட்படும் நிறுவனங்கள், கருப்புப் பணத்தை கையாளும் நபர்கள் ஆகியோரின் நடமாட்டத்தையும் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன். ரூ.10 லட்சத்துக்கு மேல் செய்யப்படும் பணபரிமாற்றத்தையும் கண்காணிப்புக்கு உட்படுத்தி இருக்கிறோம்.

சந்தேகத்துக்குரிய பணப்பரிமாற்றங்கள் தெரிய வந்தால் அதுபற்றி 18004256669 என்ற இலவச எண், 044-28262357 என்ற பேக்ஸ் எண், itcontrol.chn@gov.in என்ற இ–மெயில், 9445467707 என்ற வாட்ஸ்–அப் ஆகியவற்றில் தகவல் அளிக்கலாம். தகவல் அனுப்பியவர் பற்றிய தகவல்கள் கசியாது பாதுகாக்கப்படும்.

ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 கண்காணிப்பு குழு

அதிக எண்ணிக்கையில் கண்காணிப்பு குழு, பறக்கும்படை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 3 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் 702 கண்காணிப்பு குழுக்கள், 702 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. அதோடு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ளவர்கள் சோதனை, பறிமுதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

வர்த்தகர்கள், பொதுமக்கள் யாரிடமும் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பிடிபடும்போது, அதில் சந்தேகம் எழாவிட்டால், அதை பறிமுதல் செய்யமாட்டார்கள். ஆனால் அந்த தொகை பற்றி வருமான வரித்துறைக்கு அவர்கள் தெரிவிப்பார்கள்.

ஒரு வேட்பாளரோ, அவரது முகவரோ அல்லது அவரது கட்சியைச் சேர்ந்தவரோ ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் மதிப்புள்ள போஸ்டர்கள் போன்ற தேர்தல் பொருட்கள், மதுபோன்ற போதைப் பொருட்கள், ஆயுதங்கள், பரிசுப் பொருட்களை வைத்திருந்தால் உடனடியாக அவை பறிமுதல் செய்யப்படும்.

மக்களுக்கு இடையூறு இருக்காது

கட்சியின் நட்சத்திர பேச்சாளர் தனது சொந்த செலவுக்காக ஒரு லட்சத்துக்கு உட்பட்ட தொகையை வைத்திருந்தாலோ, அல்லது கட்சியைச் சேர்ந்தவர் பணத்தை வைத்திருந்து, பணத்தின் பயன்பாடு பற்றிய சான்றிதழை கட்சியின் பொருளாளரிடம் இருந்து வாங்கி வைத்திருந்தாலோ அந்த தொகை பறிமுதல் செய்யப்படாது.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதபடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறோம். இதற்காக ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்) அலுவலகத்திலும் 3 அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

விதிகளுக்கு உட்பட்டு சோதனை நடத்தப்படுகிறதா என்பதை இந்த குழு ஆய்வு செய்வதோடு, உண்மை இருக்கும்பட்சத்தில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை 24 மணிநேரத்துக்குள் விடுவிக்க இந்த குழு உத்தரவிடும்.

பறக்கும்படை, கண்காணிப்புக் குழுக்கள் தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும். தேர்தல் செலவு அதிகம் இருப்பதாக கருதப்படும் பகுதிகளில் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அதிகரிக்கப்படும். இந்த குழுவில் இடம் பெறுகிறவர்கள் தற்போது பயிற்சியில் உள்ளனர். விரைவில் களத்துக்கு வருவார்கள்.

மதுரை விழாவை பொறுத்தவரை தற்போது அது கோர்ட்டு விசாரணையில் உள்ளது. எனவே அதுபற்றி விரிவாக பேசமுடியாது. ஆனால் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் அவர்களின் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர். அதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருக்கிறோம். கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை அரசியல் கட்சியினர் சந்திக்க அந்த கல்லூரி நிர்வாகம் அனுமதித்தால் அதை நாங்களும் அனுமதிப்போம்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதை டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி இருக்கிறோம். அதில் குற்ற விசாரணை முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் போன்றவற்றை சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்வார்கள்.

7,316 பதட்ட வாக்குச்சாவடிகள்

பொதுவாக பதற்றத்துக்குரிய வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, வேட்பாளர் நியமனத்துக்குப் பிறகு மாறும். தற்போது தமிழகத்தில் 7,316 பதற்றத்துக்குரிய வாக்குச்சாவடிகளையும் அவற்றில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பகுதிகளாக 6,463 இடங்களையும் பட்டியலிட்டுள்ளோம்.

வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். ஆனால் அந்த திட்டம் பற்றி எந்த அரசியல் கட்சியும் இதுவரை புகார் அளிக்கவில்லை.

புனித வாரத்தில் வாக்குப்பதிவு வருவதால், கிறிஸ்தவர்களின் வாக்குப்பதிவு பாதிக்கும் என்று சென்னை உயர்மறை மாவட்ட கத்தோலிக்க சங்கம், சி.எஸ்.ஐ. சென்னை பேராயம், அகில இந்திய தலித் கிறிஸ்துவ மக்கள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் புகார்கள் கொடுத்துள்ளன.

ஆனால் தமிழகத்தில் எதுவெல்லாம் பொது விடுமுறை நாட்கள் என்பதை ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்திடம் அறிவித்திருந்தோம். எனவே அந்த புகார்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கே அனுப்பி வைப்போம். அதில் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்கு எண்ணும் இடங்களுக்கான பட்டியல் எங்களிடம் உள்ளன. இயற்கை பேரிடர் தாக்கியுள்ள இடங்கள், பிரச்சினை எழக்கூடும் என்ற சந்தேகத்துக்குரிய இடங்கள் பற்றிய தகவல்கள் வந்தால் அதை பரிசீலிப்போம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி மக்களே புகார் செய்ய வழிவகை செய்யும் சி.விஜில் செல்போன் செயலி இப்போதுதான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே அதில் தற்போது பெரிய அளவில் புகார்கள் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *