டெல்லி, ஜூலை 7–
சரத்பவார் ஓய்வுபெற வேண்டும் என்று கூறிய மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவாரின் விமர்சனத்துக்கு, லாலு பிரசாத் பதிலளித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம், அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தனித்தனியாக நடைபெற்றது. அப்போது மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறுகையில், “சரத் பவார் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை அவர் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். பா.ஜ.க. தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். உங்கள் ஆசீர்வாதங்களை எங்களுக்கு வழங்குங்கள். உங்கள் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திப்போம்” என்று கூறினார்.
ஒய்வு என்பதே இல்லை
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத்பவார் தலைமையில் நடைபெற்றது. அப்போது அஜித் பவாரின் கருத்துக்கு சரத்பவார் பதிலளித்து பேசியபோது, நான் தேசியவாத காங்கிரஸ் தலைவர். எனக்கு வயது 82 ஆக இருந்தாலும் சரி 92 வயதாக இருந்தாலும் சரி, வயது ஒரு தடையல்ல. நான் இன்னும் ஊக்கமாக இருக்கிறேன் என்று கூறினார்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக புதுடெல்லி வந்த பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் கிண்டல் குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “அஜித் பவார் சொல்வதால் சரத் பவார் ஓய்வு பெறுவாரா? ஒரு அனுபவம் மிக்க தலைவர், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா? அரசியலில் ஓய்வு என்பதே இல்லை” என்றார்.