பாட்னாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டில் அப்பாவு பேச்சு
சென்னை, ஜன.21-–
தமிழக கவர்னர் அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார் என்று பீகார் மாநிலத்தில் நடைபெற்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் அகில இந்திய சட்டமன்ற பேரவை தலைவர்கள் மாநாடு, அரசமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-–
இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் ஏழை, எளிய, விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75- வது ஆண்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழு இந்திய அரசமைப்பை உருவாக்கியது. இந்தியாவின் வரலாற்று மற்றும் புவியியல் நிலைமைகளுக்கு ஏற்றவாறும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற குறிக்கோளுடன் எதிர்கால சூழ்நிலைகளைச் சமாளிக்கும் வகையிலும் இந்திய அரசமைப்பை வடிவமைத்தார்.
சுதந்திர இந்தியாவிற்கு பின் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் சமூக நீதிக்கான திருத்தமாகும். தமிழ்நாடு அந்த சமூக நீதிக்காகப் போராடி, அந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பெரும்முயற்சிகளை மேற்கொண்டது. தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு சட்டத்தில் முதல் திருத்தத்தை கொண்டு வந்து சமூக நீதியின் காவலராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. தொடர்ந்து, பெரும்பாலான திருத்தங்கள் மக்கள் நலனுக்காகவே செய்யப்பட்டுள்ளன என்பது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒன்றாகும் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் பேசியபோது இதனை உறுதிப்படுத்தினார்.
இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் அரசமைப்புச் சட்டம் சமமான வாய்ப்பை வழங்கியிருந்தாலும், சமீபத்தில், நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் இந்தியில் தலைப்புகளைக் கொண்டுள்ளன. அந்த மசோதாக்கள் இந்தியில் இருந்தால், அந்த மசோதாவில் உள்ள சாராம்சங்கள் இந்தி பேசாத மாநில மக்களை எப்படி சென்றடையும்?.
மாநில சுயாட்சி கேள்விக்குறியாகி விட்டது. கூட்டாட்சி தத்துவமும் நீர்த்துப் போய்விட்டது. மத்திய அரசு மாநில அரசுகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அதிகாரம் மற்றும் நிதிப்பங்கீட்டில் பாகுபாடு காட்டுவது மாநில அரசுகளுக்கு பெரும் தடையாக உள்ளது. சமீபகாலமாக, அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்படாத பல விஷயங்களில் கவர்னர்கள் தேவையில்லாமல் தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு கவர்னரின் செயல்பாடுகள் கவலை அளிப்பதாக உள்ளன. தற்போதைய தமிழக கவர்னர் அரசியலமைப்புச் சட்டவிதிகளை கேலிக்கூத்து ஆக்கி வருகிறார்.
தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு பழமையான தமிழக சட்டமன்றத்தையும் கவர்னர் தொடர்ந்து அவமதித்து வருகிறார். தமிழகம் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் இதுபோன்றச் செயல்கள் கவர்னர்களால் அதிகளவில் நடைபெற்று வருவது வேதனையாக உள்ளது. கவர்னரின் அரசமைப்பு மீறல்களால், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தனது சமூக நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தவிப்பதை இந்த மதிப்புமிக்க கூட்டம் புரிந்துகொள்ளும் என்று நான் மனதார நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். மாநிலத்துக்கு சுயாட்சி
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசுகையில், ‘மத்தியில் கூட்டாட்சி அமைத்தல், மாநிலங்களுடன் சுமூகமான உறவைக் கொண்டிருத்தல், நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்துதல், “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதன் வெற்றியையை உலகிற்குப் பறைசாற்றுவதற்கும் மாநிலத்திற்கு சுயாட்சி வழங்குவது குறித்து நாம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். என்றார்.
மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு, தமிழக கவர்னரின் செயல்பாடுகளை விமர்சித்து பேசியபோது, மாநிலங்களவைத் துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் எதிர்ப்பு தெரிவித்தார். கவர்னர் குறித்து சபாநாயகர் அப்பாவு பேசியது நிகழ்ச்சி குறிப்பேட்டில் பதிவாகாது என்று கூறினார்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, ‘தமிழக கவர்னர் அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து என்னால் இங்கு பேச முடியவில்லை என்றால், வேறு எங்கு பேசுவது” என்று கேள்வி எழுப்பினார்.
எனினும் கவர்னர் பற்றிய பேச்சு பதிவாகாது என்று மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் திட்டவட்டமாக கூறியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சபாநாயகர் அப்பாவு மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார்.