செய்திகள்

அரசின் கல்வித் தொலைக்காட்சி சார்பில் பிளஸ் டூ, 10 ம் வகுப்பு பாடப் பகுதிகளுக்கான படப்பதிவு ஆரம்பம்

புதுக்கோட்டையில்

அரசின் கல்வித் தொலைக்காட்சி சார்பில் பிளஸ் டூ, 10 ம் வகுப்பு பாடப் பகுதிகளுக்கான படப்பதிவு ஆரம்பம்

 

புதுக்கோட்டை, ஜூன்.27–

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் சார்பில் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பாடப்பகுதிக்கான படப்பதிவுகள் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் பெ.நடராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

படப்பதிவினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தொடங்கி வைத்து பேசியதாவது: –

கோவிட் -19 அச்சுறுத்தல் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஜூன் முதல் நாள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள், ஆசிரியர்களது கற்றல் கற்பித்தல் பணிகளை உரிய நேரத்தில் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.ஆகவே கோவிட்-19 நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு தங்கு தடையின்றி கல்வி வழங்கிட தமிழக பள்ளிக் கல்வித்துறையால் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அதன் கீழ் செயல்படும் 32 ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஒத்துழைப்போடு பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பாடப்பகுதிகளை மாவட்டங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கொண்டு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக படப்பதிவு செய்து அனைத்து மாணவர்களுக்கும் டிஜிட்டல் பாடப்பொருள்களாக பாடங்களை காணொலிகளாக ஆவணப்படுத்தி ஹைடெக் லேப் மூலம் வழங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.பிளஸ் டூ மாணவர்களது பாடநூல்களில் உள்ள ஒவ்வொரு பாடப்பகுதியையும் அரைமணி நேர பாடத் தொகுப்பாக பிரித்து அதை டிஜிட்டல் பாடப்பொருளாக காணொலிகளாக படம் பிடித்து இயல்பான பாட வகுப்புகள் போன்று மாணவர்களுக்கு அளித்திடும் வகையில் ஹைடெக் லேப் மூலம் அனைத்து மாணவர்களது மடிக்கணினியில் அப்லோடு செய்து வழங்கிட பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களும்,பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களும் அறிவுறுத்தியுள்ளார்கள்.புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பிளஸ் டூ சிறப்புத் தமிழ் மற்றும் பத்தாம் வகுப்பு பாடப்பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பாடங்களை எடுப்பதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முதுகலை தமிழாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இங்கு நடைபெறும் படப்பதிவுகள் அனைத்தும் புதுக்கோட்டையில் எடிட் செய்யப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.எனவே மாணவர்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளைப் பார்த்து நேரத்தை வீணாக்காமல் வீட்டிலிருந்தே கல்வித் தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பப்படும் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பாடங்களை பார்க்க வேண்டும் என்றார்.

நிகழ்வின் போது முதுநிலைவிரிவுரையாளர்கள் மு.மாரியப்பன்,வே.நாராயணன்,விரிவுரையாளர்கள் பா.பழனிச்சாமி,முனைவர் இரா.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். படப்பதிவிற்கான ஏற்பாடுகளை கல்வித்தொலைக்காட்சியின் மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் முனியசாமி செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *