செய்திகள்

அய்யா வைகுண்டர் குறித்து வரலாற்றை திரிக்கக் கூடாது

ஆளுநர் ரவிக்கு பால பிரஜாபதி அடிகளார் மறுப்பு

சென்னை, மார்ச் 05–

அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் ரவியின் கருத்துக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அய்யா வைகுண்ட சுவாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகா விஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தக வெளியீட்டு விழா கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, பங்கேற்று நூலை வெளியிட்டு பேசியதில், அய்யா வைகுண்ட நாராயணரின் அவதாரம் தோன்றிய சமூக கலாச்சார காலக்கட்டத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.

சனாதன தர்மத்துக்கு ஊறு ஏற்படும்போது கடவுள் நாராயணன் அவதாரம் எடுக்கிறார். அப்படியான அவதாரமாக வைகுண்டர் 192 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார். ராமேசுவரம், காசி ஆகியவை நாட்டுக்கு பொதுவானவை என்று பேசியிருந்தார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இத்தகைய கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கடும் கண்டனம்

இந்நிலையில், அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநரின் கருத்துக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

“அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுயுள்ளது வருந்ததக்கது. அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் புரிந்து பேச வேண்டும். உருவ வழிபாடு, பூஜை புனஸ்காரங்கள் மொழி பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்படுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

அவர் நாராயணன் அவதாரம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகிறார். ஆனால் எல்லா புராணங்களிலும் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது என்று கூறியவர் அய்யா வைகுண்டர். ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் கூறுவதை விட்டுவிட்டு அய்யா வைகுண்டரை பற்றியும் சனாதானத்தை பற்றியும் பேசுவது அவரது வேலை அல்ல.

யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூற கூடாது. சனாதனத்தை காக்க வந்தவர் வைகுண்டர் அல்ல, அந்த கருத்துகளை எதிர்த்தவர் என்று கூறிய பாலபிரஜாபதி அடிகளார், ஆளுநர் ரவி கூறிய கருத்துக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *