செய்திகள்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் காஞ்சி சங்கராசாரியார் தரிசனம்

காஞ்சிபுரம், ஜன. 23–

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று அயோத்தி சென்று ஸ்ரீ ராமர் சிலைக்கு பூஜைகள் செய்து திரும்பியதாக ஸ்ரீமடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது:–

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஐதராபாதில் முகாமிட்டுள்ளார். அங்கு அவர் தினமும் செய்யும் சந்திரமெளலீசுவரர் பூஜையை நிறைவு செய்த பின்னர், தனி விமானம் மூலம் நேற்று அயோத்திக்குச் சென்று அங்குள்ள சங்கர மடத்தில் தங்கினார். பின்னர், அயோத்தியில் தசரத மன்னரின் குல தெய்வமான திரிபுரசுந்தரி அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.

இதன் தொடர்ச்சியாக ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கோயிலுக்குச் சென்று அங்கு நடைபெற்று வந்த யாக சாலை பூஜைகளில் பங்கேற்றார். மூலவர் ஸ்ரீ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருந்த கருவறைக்குச் சென்று, ஸ்ரீ ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

பின்னர், கருவறையிலேயே சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு கருவறைக்கு வெளியில் வந்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை பொருளாளர் கோவிந்தகிரிதாஸ் மகராஜை சந்தித்துப் பேசினார்.

அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், யாக பூஜைகளில் பங்கேற்கவுள்ள வேத விற்பன்னர்களுக்கும் பிரசாதம் வழங்கி மீண்டும் தனி விமானம் மூலம் ஐதராபாதுக்கு திரும்பினார். அங்கு பக்தர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *