செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை மீது ஊழல் புகார்

புதுடெல்லி, ஜூன் 15–

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் அறக்கட்டளை மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. இதன் சார்பில் ரூ.18.5 கோடியில் வாங்க ஒப்பந்தமிடப்பட்ட நிலம், தற்போது வெறும் ரூ.2 கோடிக்கு விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த புகாரை உத்தரப்பிரதேச முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் முன்னாள் அமைச்சர் பவண் பாண்டே எழுப்பியுள்ளார். இவரது புகாரின்படி, அயோத்தியின் பிஜேஷ்வர் தோப்பில் உள்ள நிலம் ஒன்று பாபா ஹரிதாஸ் என்பவருக்கு சொந்தமானது ஆகும். இந்த நிலத்தை அவர், கடந்த மார்ச் 18-ம் தேதி உள்ளூரின் சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி ஆகிய இருவருக்கும் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனையை பற்றி ராமர் கோவில் தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினரான டாக்டர் அனில் மிஸ்ரா மற்றும் அயோத்தியின் மேயர் ரிஷிகேஷ் உபாத்யா ஆகியோருக்கு தெரிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அதே நிலத்தை சுல்தான் மற்றும் மோகன் திவாரி இணைந்து ராமர் கோவில் அறக்கட்டளைக்கு ரூ.18.5 கோடிக்கு விற்றுள்ளனர். இதற்கான தொகை சுல்தான் மற்றும்மோகன் திவாரியின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நில பேரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சமாஜ்வாதி கோரியுள்ளது. இதே புகாரை ஆம் ஆத்மி கட்சியினரும் எழுப்பியுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பிரச்சினைக்குரிய நிலம் அன்றி அதை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் நிலங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றின் மீது எழுந்துள்ள புகார் குறித்து ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளரான சம்பக் ராய்கூறும்போது, ‘‘கோவில் பணி தொடங்கிய பின் உத்தரப்பிரதேச அரசு அயோத்தியில் பல இடங்களில் நிலங்களை விலைக்கு வாங்குகிறது. இதை வாங்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த காரணங்களால் இங்கு நிலங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ரெயில் நிலையத்திற்கு அருகே உள்ள முக்கிய நிலத்தின் மீதான புகாரை விசாரிப்போம். பொதுமக்களை திசை திருப்பவும் அரசியல் உள்நோக்கத்துடனும் இந்த புகார் எழுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *