செய்திகள் நாடும் நடப்பும்

அயல்நாட்டில் இளைய சக்தி , இந்திய ஜிடிபிக்கு வலு!

Makkal Kural Official

ஆர். முத்துக்குமார்


இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பங்களைப் பராமரிக்க வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அனுப்பும் பணம், இந்திய பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பாகும். இப்படி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் இருந்து வரும் வருமானம், இந்திய கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவுகிறது. இதனால் சொந்த மண்ணில் உள்ள சொந்தபந்தங்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்துகிறது.

இந்தியர்கள் தங்கள் சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புகிறார்கள். வெளிநாடுகளில் வேலை செய்து தங்களது குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதில் உலக அளவில் முதலிடம் வகிக்கின்றனர். 2023-24 நிதியாண்டில், இந்தியர்கள் 107 பில்லியன் அமெரிக்க டாலரை தங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளனர். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 லட்சம் கோடியாகும்.

முந்தைய ஆண்டுகளில் தங்களின் அனுப்பும் தொகையை 100 பில்லியன் டாலரைத் தாண்டிய இந்தியர்கள், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இந்த சாதனையை மேற்கொண்டுள்ளனர். இந்த 107 பில்லியன் டாலர் தொகை, இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடுகள் (Foreign Direct Investment, FDI) மற்றும் நிதி நிறுவன முதலீடுகளான 54 பில்லியன் டாலரை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் பணம் அனுப்பும் முக்கிய நாடுகளில் அமெரிக்கா மிகப் பெரிய பங்கைக் கொண்டுள்ளது. அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் தங்களது குடும்பத்திற்கு அதிகளவு நிதி அனுப்புகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர் ஆகியவை இந்தியர்கள் அதிகம் வேலை செய்யும் முக்கிய இடங்களாகும்.

கட்டுமானம், உற்பத்தி, சேவைத்துறை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியர்கள் அதிகம் வேலை செய்கிறார்கள்.

இந்தியர்களின் இந்த சாதனை, அவர்களின் கடின உழைப்பின் அடையாளமாகும். இதுவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக நலனுக்கும் உறுதுணையாக உள்ளது. எதிர்காலத்திலும் இத்தகைய பணப்பரிவர்த்தனைகள் அதிகரிக்க புதிய முன்னேற்றங்கள் மற்றும் துறைசார் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இருப்பினும் இந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு எதிர்கொள்ளும் சவால்கள் குறைவில்லை. பணமதிப்பு மாற்றங்கள், வெளிநாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கொடுப்பனவு விதிமுறைகள், மற்றும் வணிக ஒப்பந்தங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை இந்தியர்களின் நிதி அனுப்பும் முறையை பாதிக்கக் கூடியவையாக உள்ளன.

இந்திய அரசு, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும், வழிகாட்டுதல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

பணப்பரிவர்த்தனைகள் விரைவாக மாறி வருகின்றன. இந்த மாற்றங்கள் பல நன்மைகளை வழங்குகின்றன, ஆனால் சில சவால்களையும் கொண்டு வந்துள்ளன. இந்த சவால்களை எதிர்கொள்ள அரசு, நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றப்பட வேண்டும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் இந்திய பொருளாதாரத்திற்கு முக்கியமானவை. இந்த தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டுவதோடு, அவர்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டும். இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம், வெளிநாட்டு வேலை தேடும் தேவையைக் குறைக்க முடியும்.

உயர் வருமான நாடுகளில் காணப்படும் பலவீனமான வேலைவாய்ப்பு நிலையிலும் சாதிக்க நம் இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்.

வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான சில முக்கிய வழிமுறைகள்: கல்வி மற்றும் திறன் வளர்ச்சி அவசியமாகும்.தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, இளைஞர்கள் தொழில்நுட்ப கல்வியில் கவனம் செலுத்த ஊக்குவிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையுடன் இணைந்து பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும். இதன் மூலம், மாணவர்கள் வெளியேறும் போது தேவையான திறன்களை பெற்றிருப்பார்கள்.

புதிய தொழில்களைத் தொடங்கவும் வளரவும் ஊக்கமளிக்க அரசு சலுகைகளை வழங்க வேண்டும். அவர்களின் பார்வை உலகலாவியதாக இருப்பதையும் உறுதி செய்தாக வேண்டும்.

நாட்டின் வறுமையை போக்கும், குடும்பத்தின்

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

தொழில் தேடி வெளிநாடு செல்லும் இளைஞர்கள் வேற்று மொழி, பண்பாடு, காலநிலை எதிர்கொள்ளும் துணிச்சல், கடின உழைப்பால் சம்பாதிக்கும் பணம், தேசத்திற்கு வளம்.!

சவால்கள் நிறைந்த பயணம், ஆனாலும் துணிச்சலுடன் முன்னேறும் இளைய சக்தி, இந்தியாவின் எதிர்காலம் !


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *