போஸ்டர் செய்தி

அயராது உழைத்து வெற்றிகளை குவிப்போம்; ஜெயலலிதா நினைவிடம் முன்பு உறுதிமொழி ஏற்பு

சென்னை, டிச.5–

இடைத்தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. மகத்தான வெற்றி பெற அயராது உழைப்போம்; வெற்றி மலர்களை அம்மாவுக்கு காணிக்கையாக்குவோம் என்று ஜெயலலிதா நினைவிடம் முன்பு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதி ஏற்றார்கள்.

கழகத்தை மென்மேலும் வலுப்படுத்த அயராது உழைப்போம் என்றும் உறுதி ஏற்றார்கள்.

ஜெயலலிதாவின் 2–வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து பிரமாண்ட அமைதி பேரணி நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த பிரமாண்ட அமைதி பேரணியில் தொண்டர்களும், பொதுமக்களும் வெள்ளமென திரண்டிருந்தனர்.

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின் நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் நின்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை படிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் அதனை திருப்பி சொல்லி ஏற்று கொண்டார்கள்.

அந்த உறுதிமொழி வருமாறு:–

அண்ணா தி.மு.க.வின், காவல் தெய்வமாய் விளங்கும், புரட்சித்தலைவி அம்மாவின், மகத்தான தியாக வாழ்வு, கழகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். கழக கொள்கை பரப்புச் செயலாளராகவும், கழகப் பொதுச் செயலாளராகவும், 34 ஆண்டுகள் உலகமே வியக்கும் வகையில் ஓய்வறியாது உழைத்து, கழகத்தை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்த, மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் புரட்சித்தலைவி அம்மாவின் ஓங்கு புகழை, எந்நாளும் பறைசாற்றிட, உறுதி ஏற்கிறோம்.

அம்மா காட்டிய வழியில்….

கட்டுக்கோப்புடனும், கடமை தவறாமலும், கண்ணியத்துடனும், மக்களுக்குத் தொண்டாற்றுவது எப்படி என்பதை எல்லோருக்கும் தனது வாழ்வின் வழியாக எடுத்துரைத்த, அற்புதமான அரசியல் ஞானி, புரட்சித் தலைவி அம்மா. புரட்சித் தலைவி அம்மாவினால் வளர்த்தெடுக்கப்பட்டு, ஆயிரம் ஆயிரம் காலத்துப் பயிராக வளர்ந்திருக்கும், அண்ணா தி.மு.க., அம்மா காட்டிய வழியில் தொடர்ந்து பயணம் செய்திட, உழைப்போம், உழைப்போம் என்று, உறுதி ஏற்கிறோம்.

தமிழ் நாட்டின் பெண்களும், முதியவர்களும், பிள்ளைகளும், பரிவுடன் பேணிக் காப்பாற்றப்படுவதற்காக, தொட்டில் குழந்தைத் திட்டத்தையும், விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டங்களையும், தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக்கணினி போன்ற எண்ணிலடங்காத் திட்டங்களையும் தந்து, ஏழை, எளிய மக்களின் கண்ணீர் துடைத்த சாதனையாளர் புரட்சித் தலைவி அம்மா. கழகப் பணிகளிலும், ஆட்சி நிர்வாகப் பணிகளிலும் புரட்சித் தலைவி அம்மா காட்டிய வழியில் செயல்பட்டு, தமிழக தாய்க்குலத்திற்கும், முதியவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் உறுதுணையாய் இருக்கும் வண்ணம் செயலாற்ற உறுதி ஏற்கிறோம்.

அரசியல் மதிநுட்பம்

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் வலுவுள்ளவையாகத் திகழ்ந்தால் மட்டுமே இந்திய தேசம் வலிமை பெற்றதாக விளங்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தவர் புரட்சித் தலைவி அம்மா. தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட, நாடாளுமன்றத்தில் கழகம் வலிமை படைத்த கட்சியாக விளங்க வேண்டும் என்று வியூகம் வகுத்து, தமிழகத்தில் 37 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அண்ணா தி.மு.க.வை, நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்திய புரட்சித் தலைவி அம்மாவின் அரசியல் மதிநுட்பத்தையும், மாநில சுயாட்சி உணர்வுகளையும் எந்நாளும் மனதில் கொண்டு பணியாற்றிட உறுதி ஏற்கிறோம்.

‘‘செய்வன திருந்தச் செய்’’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, எதைச் செய்தாலும் அதை காண்போர் வியக்கும் வண்ணமும், உலகம் பாராட்டி பின்பற்றும் வண்ணமும் சிந்தித்துச் செயல்படும் அறிவுக் களஞ்சியமாய்த் திகழ்ந்தவர் நம் புரட்சித் தலைவி அம்மா. அம்மா நடைமுறைப்படுத்திய திட்டங்களை இன்று, இந்திய மாநிலங்கள் பலவும் பின்பற்றி, அம்மாவுக்கு புகழ் சேர்க்கின்றன. அம்மாவின் இந்த மகத்தான பெருமைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி, கழகத்தை மென்மேலும் வலுப்படுத்த, உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

கொடை அரசி

இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்ட நேரங்களில் எல்லாம் இரவு, பகல் பாராமல், இந்திய நாடே வியக்கும் வகையில், உலகத் தலைவர்கள் பலரும் பாராட்டும் வண்ணம் செயல்பட்டவர் நம் புரட்சித் தலைவி அம்மா. புரட்சித் தலைவி அம்மா கற்றுத் தந்த பாடங்களை மனதில் நிலை நிறுத்தி, அம்மா வழியில் நடைபெறும் கழக அரசு, தமிழக மக்களுக்கு எல்லா நேரங்களிலும் பாதுகாவலராய் செயல்படும் வண்ணம் பொது வாழ்வுக் கடமைகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி ஏற்கிறோம்.

கல்வி, மருத்துவம், சமூக நலம், பொது விநியோகம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் என்று மக்கள் நலன் காக்கும் துறைகள் அனைத்திலும், மனிதாபிமானத்தையும், சமத்துவத்தையும் இரண்டறக் கலந்து, மக்களின் தேவைகளை தனது இதயத்தால் எடைபோட்டுப் பணியாற்றிய கொடை அரசி புரட்சித் தலைவி அம்மா.

அம்மா காட்டிய பாதையை எடுத்துக்காட்டாகக் கொண்டு, கழக அரசின் பணிகளுக்கு உறுதுணையாய் நிற்கவும், அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையவும் அயராது உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

வெற்றிகளை குவிப்போம்

சட்டமன்றத் தேர்தல், கூட்டுறவுத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மீண்டும் சட்டமன்றத் தேர்தல் என்று எல்லா தேர்தல்களிலும் அண்ணா தி.மு.க. தொடர்ந்து வெற்றிமேல் வெற்றி ஈட்டியதற்கான அனைத்துப் பெருமைகளும் புரட்சித் தலைவி அம்மாவையே சாரும்.

புரட்சித் தலைவி அம்மா உழைப்பின் மகத்துவத்தை உணர்ந்து, அம்மா காட்டிய வழியில் பணியாற்றி, எதிர்வரும் சட்டமன்ற இடைத் தேர்தல், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, அந்த வெற்றி மலர்களை அம்மாவுக்கு காணிக்கையாக்கிட அயராது உழைப்போம், உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

புரட்சித் தலைவர் உருவாக்கிய அண்ணா தி.மு.க., ஆலமரமாய் உயர்ந்து நிற்கக் காரணமாய் அமைந்தது, அம்மா வகுத்தளித்த அரசியல் கொள்கைகள் தான் என்பதை சரித்திரம் சொல்லும். சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை, ‘‘அமைதி, வளம், வளர்ச்சி”, ‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற கொள்கைகளை நமக்கு வழங்கிய புரட்சித் தலைவி அம்மாவின் படிப்பினைகளைப் பின்பற்றி, ஒற்றுமையாய் பாடுபட்டு அண்ணா தி.மு.க.வை கட்டிக் காப்போம் என்று, உளமார உறுதி ஏற்கிறோம்.

போற்றிடுவோம், போற்றிடுவோம்,

புரட்சித் தலைவி அம்மாவின் புகழைப் போற்றிடுவோம் !

உழைத்திடுவோம், உழைத்திடுவோம்,

புரட்சித் தலைவி அம்மாவைப் போல் உழைத்திடுவோம் !

காத்திடுவோம், காத்திடுவோம்,

புரட்சித் தலைவி அம்மாவைப்போல்

கழகத்தைக் காத்திடுவோம் !

வாழ்க! வாழ்க! வாழ்கவே!

புரட்சித் தலைவி அம்மாவின் புகழ் வாழ்கவே!

தந்தை பெரியாரின் புகழ் என்றும் ஓங்குக !

பேரறிஞர் அண்ணாவின் புகழ் என்றும் வாழ்க !

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் என்றும் நீடூழி வாழ்க!

அண்ணா தி.மு.க. வாழ்க! வாழ்க! வாழ்க!

இவ்வாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *