சிறுகதை

அம்மா

சிறுகதை கோவிந்தராம்

அங்கம்மாள் தன் மகள் விஜயா பிரசவ வலி கண்டு அழுவதை பொறுக்க முடியாமல் சாலையில் நின்று போகும் ஆட்டோவை கை காட்டி நிறுத்தச் சொன்னாள்.

மேகம் இருண்டு வந்த வேளை. மழையில் நனைந்து கொண்டு போவதை தவிர்க்க வேகமாக சென்றார் அந்த ஆட்டோக்காரர் அங்கம்மாள் அழைப்பைக் காதில் வாங்காமல்.

அடுத்து வந்த வாடகைக் காரையும் நிறுத்துமாறு கையை காட்டினாள் அங்கம்மாள்.

அந்த ஓட்டுநர் தூறல் வந்து விட்டதால் அவர் அழைப்பை கண்டு கொள்ளாமல் காரில் இனிமையான இசையைக் கேட்டுக் கொண்டே காரை நிறுத்தாமல் சென்றார் .

மழை வலுக்க ஆரம்பித்தது.

என்ன செய்வதென்று புரியாமல் விழித்தார்.

அதே நேரம் வீட்டிற்குள் பிரசவ வேதனையால் கதறும் மகளின் சத்தம் ஒரு பக்கம் அங்கம்மாளை வேதனைப் பட வைத்தது.

ஆட்டோ ஓட்டுநரும் வாடகை கார் ஓட்டுநரும் நிறுத்தாமல் போய் விட்டார்களே….

அவர்களைத் திட்டாமல்…

ஆண்டவா சீக்கிரம் ஏதாவது ஒரு வாகனத்தை அனுப்பி வைக்கக் கூடாதா என்று ஆண்டவனிடம் முறையிட்டாள்.

அந்த நேரம் அவள் குரலைக் கேட்டு இறங்கிய ஒரு ஆம்புலன்ஸ் அருகில் வந்தது. வந்த ஆம்புலன்ஸ் டிரைவரிடம் விவரத்தை சொன்னார்.

அவரும் அங்கம்மாளுடன் வீட்டிற்குள் சென்று கர்ப்பிணிப் பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றினார். சிறிது தூரம் சென்றதும் ஆம்புலன்ஸ் நின்று விட்டது. கீழே இறங்கிப் பார்த்த ஓட்டுனர் டயர் பஞ்சராகி விட்டதை பார்த்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்.

வலி அதிகமாக விஜயா கத்தினாள்.

அங்கம்மாளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மீண்டும் தெருவில் இறங்கி வரும் வண்டிகளை நிறுத்த முயற்சிக்கிறாள். அப்போது அந்த வழியாக ஒரு வெளிநாட்டு கார் வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அங்கம்மாள் காரின் முன்னே படுத்து காரை நிறுத்தச் செய்கிறாள்.

திடீர் பிரேக் போட்ட ஓட்டுநர் அங்கம்மாளிடம் சத்தம் போட்டார். எதற்காக என் கார் முன் படுத்தாய் என்று கேட்டார்.

அங்கம்மாள் அவர் காலில் விழுந்து, அய்யா என் மகள் பிரசவ வேதனையில் துடிக்கிறாள் தயவு செய்து அவளை எப்படியாவது பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுங்கள் என்றாள்.

வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் உடனே அவரும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் விஜயாவை தூக்கி காரில் பின் சீட்டில் படுக்க வைக்கிறார்கள்.

ஓட்டுனர் காரை வேகமாக ஓட்டி ஆஸ்பத்திரிக்கு சென்றார். வலி அதிகமாக அவர் உரக்கக் கத்த ஓட்டுனர் காரின் வேகத்தைக் கூட்டி காரை ஆஸ்பத்திரிக்கு ஓட்ட ஆரம்பித்தார். அழும் ஓசை அடங்கியது. ஆனால் புதிதாக அழும் ஓசை. அது தான் பிறந்த குழந்தையின் முதல் ஒலி.

குழந்தையை கையில் எடுத்து தன் நனைந்த சேலையால் குழந்தையை துடைத்து ஓட்டுனரிடம் அய்யா நீங்கள் தான் நேரில் வந்த கடவுள். எனக்கு நிம்மதியையும் என் மகளுக்கு புதுப் பிறப்பையும் என் பேரப்பிள்ளைக்கு புது வாழ்வையும் கொடுத்த கடவுள் நீங்கள் தான் என்று அவர் காலில் விழுந்து வணங்குகிறாள்.

அவர் மூவரையும் அங்கம்மாள் வீட்டில் சென்று விட்டு விட்டு வீட்டிற்குத் திரும்பினார்.

காரில் வீட்டிற்கு திரும்பும் போது தன் ஆரம்ப கால வாழ்க்கையை நினைத்துப் பார்த்தார். இதே மாதிரி அன்று ஒரு நாள் அவரின் தாய் பிரசவ வலியால் கத்திக் கொண்டே மழையில் நனைந்து தெருவில் போகும் வண்டிகளை நிறுத்த முயற்சித்தார். யாரும் நிறுத்தாமல் போய் விட்டார்கள். வேறு வழியில் வலியால் துடித்து அழுது புலம்பி பெருமூச்சு விட்டு தான் தன்மை பெற்றுப் போட்டு விட்டு கடைசி மூச்சை விட்டது நினைவிற்கு வந்தது.

இன்று கஷ்டப்பட்டு முன் வந்து உழைத்து பெரும் தொழிலதிபராகி ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து சுத்தமான சூழ்நிலையில் வாழப் பழகி எந்தப் பொருளும் சுத்தமாக வைத்து பழகிய வேளையில் தன் வெளிநாட்டு விலை மதிப்பில்லா காரில் ஒரு பிரசவத்தை நடந்தது கண்டு மகிழ்ந்தார். அவர் அந்த காரின் ஓட்டுனர் அல்ல. அவர் தான் அந்த காரின் உரிமையாளுரும் பெரும் புகழ்பெற்ற தொழிலதிபரும் கூட.

அன்று தன் அம்மாவை காப்பாற்ற முடியாது போய் பிறந்து இன்று ஒரு தாயை காப்பாற்றி விட்டோமே என்று மகிழ்ந்து அம்மா என்று அழைத்தார்.

மனம் லேசாகி மகிழ்ச்சியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *