செய்திகள்

அம்மா உணவகங்கள் நாளை வழக்கம்போல் செயல்படும்

சென்னை, ஏப்.24–

சென்னையில் அம்மா உணவகங்கள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்றும் நாளை நடைபெறும் ஊரடங்கின் போது வழக்கத்தை விட அதிகமானோர் சாப்பிட வருவார்கள் என்பதால் கூடுதலாக உணவு தயாரிக்க மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏழை, எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான உணவு வழங்கப்படுகிறது. ஆதரவற்றவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் கூட அம்மா உணவகங்களில் பாத்திரங்களை கொண்டு சென்று உணவு வாங்கி சாப்பிட்டனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக நாளை மீண்டும் முழு அடைப்பு நடைபெறுகிறது. ஓட்டல்கள், சிறு கடைகள், டீக்கடைகள் அனைத்தும் இன்று இரவு 9 மணிக்கு மூடப்படுகிறது.

திங்கட்கிழமை காலையில் தான் அனைத்து கடைகளும் திறக்கப்படுகிறது. இதனால் அம்மா உணவகங்களை முழுமையாக செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஊரடங்கின் போது 3 வேளையும் அம்மா உணவகம் மூலமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் இட்லி, மதியம் கலவை சாதங்கள், இரவு சப்பாத்தி அல்லது சாம்பார் சாதம் போன்றவை தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் ஊரடங்கின் போது வழக்கத்தை விட அதிகம் பேர் சாப்பிட வருவார்கள் என்பதால் கூடுதலாக உணவு தயாரிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *