சிறுகதை

அம்மாவுக்கு கல்யாணம் -ராஜா செல்லமுத்து

சரிதாவுக்கு சின்ன வயதிலேயே கணவன் இறந்து விட்டான் . ஆண் குழந்தைகளை வைத்துக்கொண்டு திசை தெரியாமல் வாழ்க்கையை நடத்தினாள் சரிதா.

அவள் கடந்து வந்த பாதைகள் கல்லும் முள்ளும் சாட்சி சொல்லும். அப்படி ஒரு ரணஅவஸ்தையில் அவள் வாழ்ந்து வந்தாள்.

சரிதாவின் கணவன் அவளை விட்டுப் போகும்போது சரிதாவுக்கு வயது 32 . வாழ வேண்டிய பருவம். இன்பத்தை அனுபவிக்க வேண்டிய வயதில் கணவன் விட்டுப் போனதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டாள் சரிதா.

இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி கரை சேர்வது? என்பது தான் அவள் எண்ணம் முழுவதும் வியாபித்திருந்தது. அதைவிட இந்த சமூகத்தில் எப்படித் தன்னால் வாழ முடியும்? வெளியில் இருக்கும் மனிதர்கள் தன்னை எப்படி பாவிப்பார்கள்? கணவன் இருக்கும் பெண்களையே கவரும் ஆண்கள் இருக்கும் இந்த சமூகத்தில் எப்படி ஆயுள்காலம் முழுவதும் தள்ள முடியும் ? என்பதும் அவள் மனதில் ஆணியாக இறங்கியது.

இரவு முழுவதும் அழுதுகிடப்பாள் குழந்தைகளிடம் சிரிப்பை மட்டுமே காட்டுவாள். சின்னச் சின்ன குழந்தைகளாக இருந்ததால் இவளின் அவஸ்தை அந்த குழந்தைகளுக்கு தெரியாமல் இருந்தது.

வீதியில் போனால் ஆண்கள் பார்வை . இரவில் தூங்க முடியாது யார் யாரோ வந்து கதவை தட்டினார்கள்.

என்ன சரிதா? மாமனுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்துறது? என்று இரட்டை அர்த்தங்களில் உறவு பேசினார்கள். மாராப்பு சேலை கொஞ்சம் விலகினாலும் கழுகுக் கண் கொண்டு பார்த்தார்கள்.இதெல்லாம் சரிதாவை என்னவோ செய்தது.

ஆம்பளை இல்லாத வீடா இருந்தா ஆம்பளைங்க ரொம்பவே சலுகை எடுத்துடுவாங்க என்று சரிதா நினைத்துக்கொண்டாள்.

அவளை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள எத்தனையோ நபர்கள் ஆசைப்பட்டார்கள். ஆனால் அதற்கு சரிதா உடன்படவில்லை. ரெண்டு ஆம்பளை பசங்கள வச்சிகிட்டு எனக்கு 2 வது கணவன் தேடுதா .வேண்டாம் என் வாழ்க்கை இதோட போதும் என்று எத்தனை நபர்களிடம் சொல்லி வந்தாள்.

இல்ல சரிதா உனக்கு இளமை இருக்கு. இன்னும் வயசு இருக்கு. நீயே இன்னொரு வாழ்க்கையை தொடங்க கூடாது ? என்று எத்தனையோ பேர் அவளின் அடி மனதில் சூடு ஏற்றிப் பார்த்தார்கள்.

ஆனால் அவள் எந்த பொறிகளுக்குள்ளும் சிக்கவில்லை; அவள் எண்ணம் முழுவதும் தன் இரண்டு குழந்தைகளை காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது.

ஆனால், இந்த ஆண் வர்க்கம் சரிதாவை எப்போதும் போலவே களங்கம் செய்யத் தயாராக இருக்கும். அத்தனை பிடியிலும் வெளியே வந்தாள் ; அவளின் மன வேதனைகள் சொல்லால் சொல்லிமாளாது

இங்க பாரு சரிதா. ஒரு பொம்பள ஆம்பள துணை இல்லாம நிச்சயமா வாழ முடியாது. உனக்கு யாரு கூட தொடுப்பு இருக்கு. அத நீ வெளியே சொல்ல மாட்டேங்குற?

இல்ல அப்படியெல்லாம் எனக்கு யாரு கூடவும் தொடர்பில்லை என்று சரிதா சொல்லுவாள்.

இந்த வயசுல எப்படி உன்னால தனியா இருக்க முடியும்? முடியாது கண்டிப்பா யார்கூடவாவது தொடர்பு இருக்கும் என்று சில ஆண்கள் பேசிக் கொள்வதற்கு

ஏன் ஆம்பளை துணை இல்லாமல் இருக்க முடியாதா? என்று கேள்வி கேட்கும் ஆண்களுக்கு சரிதா பதில் சொல்லியே காயம்படுவாள்.

உன்னால சும்மா இருக்க முடியாது சரிதா. நீ சொல்றது பெரிய விஷயம் இல்லை? என்று இரட்டை அர்த்தத்தில் பேசும் மனிதர்களாகவே நிறையப்பேர் இருந்தார்கள்.

இங்க பாரு சரிதா நீயும் சந்தோஷமா இருக்கலாம் . நானும் சந்தோஷமா இருக்கலாம். வா வாழலாம் என்று எத்தனை ஆண்கள் கேட்டார்கள். ஆனால் அவள் எதற்கும் பிடி கொடுக்கவில்லை.

காலங்கள் உருண்டோடின

சரிதாவின் இரண்டு பிள்ளைகளும் ஆளுக்கொரு வேலையில் அமர்ந்தார்கள்.

அதுவரையில் அம்மா உடனே அம்மாவிற்கு துணையாக இருந்த பிள்ளைகள் அம்மாவை விட்டுப் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அம்மாவின் கஷ்டங்கள் அம்மாவின் துயரங்கள் என்று அத்தனை பிரச்சினைகளும் குழந்தைகள் பெரியவர்களானதும் அறியத் தொடங்கினார்கள்.

அந்த இரண்டு பிள்ளைகளும் முடிவெடுத்தார்கள்.

அம்மா உங்களுக்கு கல்யாணம் என்று மூத்த மகன் சொன்ன போது

சரிதாவுக்கு தூக்கிவாரிப்போட்டது

என்ன எனக்கு கல்யாணமா? மருமக எனக்கு வரப் போற நேரத்துல .எனக்கு கல்யாணமா? நல்லா இருக்கு கதை . ஊரு உலகம் என்னைப் பாத்துச் சிரித்திடும் வேண்டாம் என்று சொன்னாள் சரிதா.

இல்லம்மா உங்களுக்கு ஒரு துணை வேணும். சின்ன வயசில் இருந்து நீங்க பட்ட கஷ்டத்தை நாங்க பார்த்திருக்கோம். நீங்க எத்தனையோ சொல்லுங்க . உங்கள திருமணம் செய்ய எத்தனையோ பேர் பார்த்தாங்க. ஆனா நீங்க அதிலிருந்து தப்பிச்சிட்டிங்க. நாங்களும் உங்க கூட இருந்ததுனால யாரும் உங்களுக்கு தொந்தரவு தரல.

இப்ப நாங்க ரெண்டு பேரும் உங்கள விட்டுட்டு போயி வெளியூரில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம்.

அதனால இனி நீங்க தனியா இருக்கிறது தப்பு. நாங்க சொல்றத நீங்க கேட்டுத்தான் ஆகணும் என்று பிடிவாதமாக சொன்னார்கள் இரண்டு மகன்களும்.

எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் இரண்டு மகன்களும் கேட்கவில்லை.

சரிதாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமானது.

ஒருவழியாக ஒரு நல்ல மனிதனை பிடித்து சரிதாவைத் திருமணம் செய்யச் சொன்னார்கள்.

அவளுக்கும் அந்த மணமகன் பிடித்திருந்தது . ஒரு முகூர்த்த நாளில் சரிதாவுக்கு மகன்கள் தலைமையில் திருமணம் நடந்தேறியது.

ஊரில் உள்ளவர்கள் ஆயிரம் பேசட்டும் . ஆனால் எங்க அம்மா இப்போது பாதுகாப்பாக ஒருவரின் கையில் இருப்பார் என்பது எங்களுக்கு சந்தோஷம்.அது போதும் என்று இரண்டு மகன்களும் வேலை விஷயமாக வெளியூருக்கு பயணமானார்கள்.

அம்மா ஒருவரின் கையில் பத்திரமாக இருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *