சிறுகதை

அம்மாவின் வாக்கு- ராஜா செல்லமுத்து

கிட்டத்தட்ட முடிந்துவிடும் என்ற நிலையில்தான் அம்புஜம் அம்மாள் படுக்கையில் படுத்துக் கிடந்தார்.

அவரின் இறுதி நாட்கள் என்பதைவிட , இறுதி நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தன . அவரைச் சுற்றி ஒரு மகள், ஒரு மகன் மட்டுமே இருந்தார்கள். உடன் வேறு யாரும் இல்லை.

ஆனால் அம்புஜம் பெற்றெடுத்தது மொத்தம் பதினைந்து பேர் . 15 பேரும் வெவ்வேறு ஊர்களில் இருந்தார்கள். எல்லாம் வந்து சேர்வது சாத்தியமில்லை என்றே தோன்றியது.

உடனிருக்கும் ஒரு மகன் ஒரு மகள் மட்டும்தான் அம்புஜத்தின் அருகில் இருந்தார்கள்.

அப்படி இப்படி என்று இழுத்துக் கொண்டிருந்த உயிர் சட்டென்று அடங்கியது.

யாரிடமும் சொல்லிவிடவா? சொல்லிவிட்டால் வந்து சேர வழியில்லாத ஒரு சூழல் . நோய்க் காலமாதலால் மாநிலங்கள் மாவட்டங்கள் என்று போக்குவரத்து அற்று சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.

ஒரு மகன், ஒரு மகள் மட்டுமே அம்புஜத்தின் கடைசிக் காரியங்களை செய்து முடிக்க வேண்டிய சூழல்…

காரியங்களை செய்ய முற்பட்டதும் அம்புஜத்தின் வாக்கை அருகில் இருந்த மகள் சொன்னாள்:

அம்மா தெய்வம் மாதிரி, அவங்க வாக்குப் பலித்து விட்டது. என் கூட பிறந்தவங்க மொத்தம் 15 பேரு நாங்க எல்லாம் மொத்தமா தான் இருந்தோம்.

ஆனா அம்மாவை யாரும் வந்து சரியா பாக்கல. அதனால ஒரு நாள் திட்டுனாங்க.

நான் என்னம்மா பண்றது? எனக்கு வாச்ச பொண்டாட்டி …. உன்மருமக …அவள நீதான கட்டிவச்சே . அதுதான் அவ வந்து பாக்க மாட்டேங்கறா? என்று மகன் சொன்னான்.

நான் உன்னை எல்லாம் வந்து பார்க்க முடியாது. என்ன எனக்கு வாச்ச புருசன் அப்படி . நீ தான கட்டி வச்ச என்று மகள் சொன்னாள்.

இப்படி ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்தி யாரும் அம்மாைவை பார்க்க வில்லை. அம்மா அதைப்பற்றி எல்லாம் வருத்தப்படவில்லை

ஆனால் அவர்கள் நினைத்தால் வந்து பார்த்திருக்க முடியும் என்பது மட்டும் தெரியும்.

அவர்களுக்கு அந்த எண்ணம் இல்லை என்பது நாட்கள் கடந்த பின்பு தான் அம்மாவிற்கு விளங்கியது.

ஒருநாள் ஒரு சந்தர்ப்பத்தில் அத்தனை பேரும் கூடிய ஒரு விழாவில் அம்மா சொன்னாள்:

நீங்க என்னை பார்க்க மாட்டேங்கிறீங்க. கண்டிப்பா வருத்தப்படுவீங்க. நான் செத்த பிறகு நீங்க என் முகத்துல முழிக்கக் கூடாது. இது கண்டிப்பா நடக்கும் என்று சொன்னார்.

அன்று எதை நினைத்து எப்படி மனம் வருந்தி சொன்னாரோ? தெரியவில்லை. இது சாபமா?என்றும் புரியவில்லை. ஆனால் அது நடந்துவிட்டது .

அந்தத்தாய் என்ன காரணத்திற்காக அப்படி சொன்னாரோ தெரியவில்லை? அவர் இன்று இறந்துவிட்டார்

அவரின் முகத்தைப் பார்க்க அவர்களால் வர முடியாத சூழலை இயற்கை ஏற்படுத்தி வைத்திருந்தது.

இதுதான் ஒரு தாயின் சக்தி. ஒரு தாயின் வாக்கு. ஏதோ ஒரு காரணத்திற்காக தன் பிள்ளைகளை அம்மா சொல்லி இருக்கக் கூடும்.

ஆனால் அந்த வார்த்தை இப்போது உண்மை ஆகிவிட்டது. இப்போது பலித்துவிட்டது என்று அருகிலிருந்த மகள் சொன்னதும். அது அங்கிருந்த

அத்தனை பேரையும் ஆட்டி வைத்தது.

அம்மாக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் செவிகளில் போய் சேர்ந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *