சிறுகதை

அம்மாவின் நேர்மை – ராஜா செல்லமுத்து

ராஜலட்சுமி பார்ப்பதற்கான அழகாகவும் நடுத்தர வயதை ஒட்டியவளாகவும் இருந்தாள். ஏழாவது படிக்கும் ஒரே மகன் பிரதீப்.

கணவன் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அடிக்கடி போன் செய்வது. வருடத்திற்கு ஒருமுறை மனைவி குழந்தையைப் பார்ப்பது என்று இருந்தார்.

ராஜலட்சுமியுடன் அவளின் அம்மாவோ அப்பாவோ இல்லை. ராஜலட்சுமியின் மாமியாரோ மாமனாரோ உடன் இல்லை. தனியாக தனி ஆளாகத்தான் இருந்தாள். உடன் மகன் பிரதீப் மட்டும்தான்.

அவளை அக்கம் பக்கம் உள்ளவர்கள் அநாகரீகமாக பேசினாலும் அதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டாள். ஊர் வாயை அடைப்பது கடினம் . நம் வாயை அடைத்துக் கொள்வது சுலபமென்று யார் எது பேசினாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவள் வாழ்ந்து வந்தாள்.

சரியாக ஆடையை உடுத்துவதை கூட அநாகரீகமாக பேசுவார்கள். யாருடனும் கலகலவென்று பேச முடியாது. அதற்கு ஒரு ‘ க் ’ வைத்துப் பேசும் இந்தச் சமூகம் அவளைச் சுற்றி இருந்தது.

ஆனால் தன்னை ஒரு பத்தினியாக யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என் சுயம் எனக்கு தெரியும் என்று வாழ்ந்து வந்தாள். அவளை அப்படியே நம்பினான் அவளின் மகன் பிரதீப்பும்.

சின்னவனாக இருந்தாலும் அறிவு அதிகம் . அதனால் தன் அம்மாவைப் பற்றி யார் குறை சொன்னாலும் பேசினாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான் .

தன் தாயைப் பற்றி தனக்கு தெரியும் என்று அந்த வயதில் நினைத்துக் கொண்டான்.

இவ்வளவு காலங்கள் தனியாக வாழ்ந்து வந்த ராஜலட்சுமியின் வீட்டிற்கு நிறைய சொந்த பந்தங்கள் வருவார்கள்;. போவார்கள் .

ஆனால் ஒரு நாள் கூட இரவில் அவர்கள் தங்கியதில்லை . அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் யாரும் தங்கியதில்லை . அப்படி ஒரு நிலைமை ராஜலட்சுமிக்கு ஏற்பட்டதில்லை.

ஆனால் ஒரு நாள், தூரத்து உறவைச் சேர்ந்த குமரன் என்ற வாலிபர் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. குமரன் ராஜலட்சுமி நெருங்கிய உறவினர் என்றாலும் அவனை எப்படி இரவில் அனுமதிப்பது என்று ராஜலட்சுமிக்கு குழப்பமாக இருந்தது.

எப்படியும் இந்த ஊரில் உள்ளவர்கள் தவறாகத்தான் பேசப் போகிறார்கள். ஆனால் தன்மகன் என்ன நினைப்பான் என்று பரிந்துவித்தாள் ராஜலட்சுமி.

இரவு நடுநிசியைக் கடந்த வேளையில் வந்த குமரனை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியாத நிலை. என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மகனைத் தட்டி எழுப்பினாள்.

வேண்டாமே தூங்கட்டுமே என்று குமரன் சொன்னான்.

இல்ல அவன் எழும்பட்டும் என்று பிரதீப் தட்டி எழுப்பினாள் ராஜலட்சுமி.

தம்பி நம்ம வீட்டுக்கு என்னோட தம்பி முறையான குமரன் வந்து இருக்காரு .இன்னைக்கு ராத்திரி அவர் இங்கே தான் தங்குவார் என்று அந்த நேரத்தில் அந்த குழந்தையின் உறக்கத்தை கெடுத்து எழுப்பி குமரனை அறிமுகப்படுத்தினாள் ராஜலட்சுமி.

தன் தாய் சொல்வது எதுவும் தலையில் ஏறாத அந்தச் சிறுவன் அப்படியே தூங்கிப் போனான்.

இதைச் சற்றும் எதிர்பாராத குமரன்.

இல்ல உங்களுக்கு கஷ்டமா இருந்தா நான் இப்பவே கிளம்புறேன் என்று சொன்னான்.

இல்ல குமரன். இந்த ஊர் உலகம் என்ன தவறா பேசினாலும் என்னோட புள்ள என்ன உண்மையா நம்புறான்; நீ எனக்கு தம்பி முறை தான்; அப்படிங்கறது உனக்கும் எனக்கும் தெரிஞ்ச விஷயம் .

அவன் தூங்கி எழுந்து உன்ன பார்க்கும்போது, அவன் மனசுல தப்பான எண்ணம் தோன்றும். ஆனா இப்ப அவனுக்கு தோனாது. உன்ன பத்தி அவனுக்கு சொல்லிட்டேன்.

இப்ப நீ தூங்கப் போகலாம் என்று குமரனுக்கான படுக்கை அறையைக் காட்டினாள் ராஜலட்சுமி.

இரவு விடிந்தது. பள்ளிக்குச் செல்லத் தயாராக இருந்தான் பிரதீப்.

அப்போது குமரனைப் பார்த்த பிரதீப்புக்கு ஒன்றுமே தோன்றவில்லை . பேசவில்லை. மாறாக மாமா.நான் ஸ்கூல் போயிட்டு வரேன். நீங்க சாப்பிட்டுட்டு அம்மா கூட இருங்க என்று சொல்லிச் சென்றான் பிரதீப்.

ராஜலட்சுமி குமரனைப் பார்த்தாள். அவளின் கண்களில் துளிர்விட்டது கண்ணீர்.

குமரன் ஒரு வார்த்தை பேசவில்லை .ஊர் உலகம் என்ன சாென்னால் என்ன? ராஜலட்சுமியின் அம்மாவின் நேர்மைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருப்பதை அறிந்து கொண்டான் குமரன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *