சிறுகதை

அம்மாவின் அன்பு | ராஜா செல்லமுத்து

Spread the love

“விலை மதிப்பற்றது அம்மாவின் அன்பு”

வளர்மதி வீட்டுக்கு வந்த நான்கு நாட்களாக கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டிருந்தார் அம்மா தவமணி.

மூச்சு விடும் நேரம் கூட வேலைப் பளுவாகவே இருந்தது.

வளர்… வளர்…. காலையில என்ன சமைக்கலாம்?

“ஒன்னோட இஷ்டம்மா”

“ஏய், கண்ணு லீவுல வந்திருக்க? ஒனக்கு பிடிச்சத செஞ்சு குடுத்தா தான் எனக்கு மனசாறும். நீயே சொல்லு ஒனக்கு என்னென்ன பிடிக்கும்னு” தவமணி அரக்கப்பரக்க பேசியதை உள்வாங்கிய வளர்.

“ம்ம்” இட்லி, சட்னிம்மா, இதையே தான் டெய்லி சாப்பிட்டு இருக்க வேற ஏதாவது சொல்லேன்.

“வேற என்னெம்மா வேணும்.

எனக்கு இதுவே போதும்.

அப்பா சிக்கன் எடுக்க போயிருக்காரு. இப்ப வந்திருவார். பிரியாணி செய்யலாமா?

“உன்னோட இஷ்டம்மா”

“டவுன்ல நல்லது பொல்லாது செஞ்சு சாப்பிட்டு நாளாகும். நாக்கும் செத்துப் போயிருக்கும். இன்னைக்குப் பிரியாணி தான்” என்று தவமணியின் வார்த்தையில் பாசம் தொக்கி நின்றது.

“சரிம்மா உன்னோட இஷ்டம்” என்ற வளர் பயணக்களைப்பில் நெடுந்துயில் கொண்டாள்.

முணுமுணுவென்று வேலையில் மூழ்கியபடியே இருந்தார் தவமணி.

வெங்காயம் வெட்டுவது, தக்காளி நறுக்குவது, அரிசி அரிப்பது என்ற ஓய்வில்லாத வேலையில் மூழ்கிக் கிடந்த தவமணியைப் படுத்துக்கொண்டே ஓரக் கண்களால் பார்த்தாள் வளர்மதி.

கண்களில் ஈரமும் நெஞ்சில் நேசமும் பொங்கப் பொங்க வேலை செய்துகொண்டிருந்த தவமணியை படுத்து,

” அடடா…. இப்படியொரு அம்மாவா? நாமதான் அம்மாவ எப்பவும் புரிஞ்சிக்கிறலயோ ? எப்படியெல்லாம் திட்டியிருக்கோம். அம்மாவ ஒரு வார்த்தை கூட பேச விடமாட்டோம். எப்பவும் அவமானமா தான் பேசுவோம். அத்தனையும் சகிச்சுக்கிட்டு எப்படி? அம்மா என்று உள்நாக்கு உச்சரித்தபோது வளர்மதியின் விழிகள் குளமாகின பெத்து, வளர்த்து, ஈ, எறும்பு கூட கடிக்கவிடாம, ஆளாக்கி கட்டியும் குடுத்து என்னோட புள்ளையே பெரிய மனுஷியாகிட்டா இன்னும் நம்மள சின்னப்புள்ளையா நினைக்கிற அம்மாவை நெனச்சா நெக்குறுகுது. அறுந்து போன என்னோட வாழ்க்கையில ஆணி வேரா இருக்கிறது மட்டுமில்ல அஸ்திவாரமாகவும் அம்மா அப்பா தான் இருக்காங்க. அம்மாவும் அப்பாவும் இல்லன்னா, என்னைக்கோ நின்னு போயிருக்கும் என் மூச்சு. இன்னவரைக்கும் இந்த ஜீவனுக்குள்ள உசுரு ஓடிக்கிட்டு இருக்குன்னா அதுக்கு அம்மா அப்பா தான் ஆதாரம். இவங்க மட்டும் இல்லன்னா என்னைக்கும் என் மூச்சு நின்னு போயிருக்கும்.

அம்மா, நீ வெறும் அம்மா இல்ல. என்னோட குலசாமி” என்று வளர்மதி அழுதுகொண்டே இருந்தாள்.

முனுமுனுவென்று வேலையில் மூழ்கிக்கிடந்தார் தவமணி விழுது விட்டுக்கொண்டிருந்தது, வளர் அழுதகண்ணீர்

“யம்மா …. வளர் யம்மாடி…. என்றபடியே சிக்கன் பார்சலோடு வீட்டினுள் நுழைந்தார் அப்பா, சுவாமிநாதன்.

“டேய், எந்திரிடா …சாப்பிட்டுட்டு படு எந்திரி எந்திரி எந்திரி என்றபடியே வளரின் அருகில் வந்தமர்ந்தார், சுவாமிநாதன் அப்பா வந்ததும் புரண்டு படுத்த வளர் அப்பா, இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்.

“ஏன்டா, நைட்டு ட்ராவல் பண்ணியிருப்ப” ரொம்ப டயர்டா இருக்கும். சாப்பிட்டுட்டு படுவேன்” என்ற அப்பாவின் கரிசனைப் பேச்சு வளரை என்னவோசெய்தது. அருகில் அமர்ந்த அப்பாவின் மடியில் தலை வைத்த வளர்மதி, கடகடவெனக் கண்ணீர் சிந்தினாள்,

“ஏய்…. வளர் ஏன் இப்படி? வேண்டாம்மா “அழாதே. நீ எதுக்கு அழுறேன்னு எங்களுக்கு தெரியும். உன்னோட, உன் அக்காவோட வாழ்க்கை இப்படி ஆகிப்போச்சுன்னு தான நினைக்கிற . நானும் உன்னோட அம்மாவும் உசுரோட இருக்கிறவரைக்கும் எதுக்கும் கவலைப்படாத உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் கண்டிப்பா காப்பாற்றுவேன் என்று சுவாமிநாதன் சொன்னபோது தவமணியும் வந்து சேர்ந்தார்.

“யம்மா வளர், ஏன் இப்படி? என்று தவமணியும் வளரின் கண்ணீரைத் துடைத்துவிட தவமணியின் கண்களிலும் நீர் பனித்தன. அழாதேம்மா. நாங்க இருக்கோம் இப்படிப் போன ஒன்னோட வாழ்க்கைக்கு நாங்களும் ஒரு காரணம்தான் நீ எதுவும் வருத்தப்படாம வாழ். நாளைக்கு போய் யோகேஸ்வரியை கூப்பிட்டு வா மனசுல எதுவும் வச்சுக்கிராதே என்று அம்மா தவ­ம­ணி­யும் வளர்மதியை ஆதரவாகத் தோள் தட்டினார்.

“ம், சரி­ம்மா என்று படுக்கையைவிட்டு வளர், குளித்து முடித்து கிளம்பினாள் .

சற்று நேரத்திற்கெல்லாம் ஹாஸ்டலில் இருந்த மகள் யோகேஸ்வரி வந்து நின்றாள்

” ஹாஸ்டல்ல இருக்கிறாளேன்­னு கவலைப்படாதே. ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் நானும் உங்க அப்பாவும் போய் பார்த்துருவோம். நீ ஒன்னும் கவலைப்படாத. இருக்கிற நாலு நாளும் நல்லா பார்த்துக்கோ. அப்பெறம் நாங்க பார்த்துக்கிறோம் என்று சுவாமிநாதன் சொல்ல வள­ரின் கண்ணீர் மேலும் வளர்ந்தது.

” ஏய், நீ இப்­படி அழு­திட்டு இருந்தன்­னா காலம் பூராம் அழு­த­ிட்டே இருக்க வேண்­டி­யது தான். எந்­தி­ரிச்சு போயி வேற வேலைய பாரு என்று அம்மா சொல்ல வளர் மகள் யோகேஸ்­வ­ரிடன் விடு­மு­றைக்கு வந்த நான்கு நாட்­களும் அழ­காகக் கழித்தாள்.

நான்காம் நாள் யோகியை ஹாஸ்­டலில் கொண்டுபோய் விட்டு விட்டு வந்தாள் வளர்­மதி

“அம்மா நான் ஊருக்கு கிளம்ப­னும் என்று வளர்­ கேட்ட போது

“அதான்­தெ­ரி­யுமே .அங்க பாரு உங்க அம்­மாவ என்று சொன்­ன­போது ஐந்து கட்டைப் பைகளில் தேங்காய் மாங்­காய் எலு­மிச்­சைப்­பழம், காய்­க­றிகள் என எல்­லா­வற்­றையும் அமுக்கிக் கொண்­டி­ருந்தாள் தவ­மணி.

அம்மா இதெல்லாம் என்ன? நீ வச்சிருக்கிறதெல்லாம் ஊர்ல கிடைக்கும்மா . இவ்வளவையும் பஸ்ல கொண்டு போக முடியாது.

“சும்மாயிரு அம்புட்டையும் டவுன்ல காசு குடுத்து தானே வாங்கணும். இருக்கட்டுமே என்ற படியே பைகளில் வைத்துக் கொண்டிருந்தாள் தவமணி.

ஏய்… தவ­ம­ணி இதெல்லாம் வேண்டாமே . என்னென்­னமோ பிள்ளைகள கல்யாணம் பண்ணி சீதனம் குடுத்து விடுகிறது மாதிரியே குடுத்து வி­டு­றியோ என்று சுவாமிநாதன் சொல்ல உங்களுக்கு எப்பவும் கிண்டல் தான்.

புள்ளைக நல்லா சாப்பிடுமே. கொண்டு போகட்டும்னு சொன்னபோது வளருக்கு மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

ஒன்­பது மணிக்கு ஆட்டோ வரச் சொல்லட்டுமா? என்று அப்பா கேட்க

“சரிப்பா’’ என்று வளர் சொல்ல வரும் 9 மணி வரை பாசத்தால் நிரம்பி வழிந்த அந்த வீடு சரியாக ஒன்­ப­து 9 மணிக்கு ஆட்டோ வந்தது.

அம்மா, அப்பா காலில் விழுந்து வளரின் கண்களில் அருவியாய் பொங்கியது கண்ணீர்.

அம்மாவின் அன்பில் கொடுத்த பொருள் நிறைந்த அவளின் பைகள் ஆட்டோவில் நிரம்பி வழிந்தது.

ஊரைவிட்டு விடுபட்டபோது அடுத்து விடுமுறையை எண்ணி ஏங்கியது வளரின் மனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *