சிறுகதை

அம்மாவா ? மனைவியா? | அம்சவேணி ரமேஷ்

வாசலில் செருப்பை கழட்டி விடும் போது வீட்டுக்குள் அம்மாவும் சுகந்தியும் பலமாக சண்டை போட்டுக்கொண்டிருப்பது காதில் விழுந்தது தனபாலுக்கு.

அலுவலக ஹேண்ட்பேக்குடன் ஹாலுக்குள் நுழைந்தவன் அப்படியே நின்று விட்டான்.

ஷோபாவில் அமர்ந்திருந்த அம்மா,சமையலறையை பார்த்து கத்திக்கொண்டிருக்க அங்கிருந்து பதில் அம்புகள் வந்த வண்ணம் இருந்தது.

அம்மா சம்பூர்ணம் தனபாலைப் பார்த்து விட்டு அமைதியானார்.

சமையலறை அருகே போய் நின்ற தனபாலை கவனிக்காத சுகந்தி கத்தியபடியே திரும்ப இவனைப் பார்த்து விட்டு குரலை விழுங்கினாள்.

” ஏழெட்டு வருஷமா இதுவே உங்களுக்கு பொழப்பா போச்சு. ச்சை!” என்றபடி தன் தலையில் அடித்துக்கொண்டு பெட் ரூமிற்குள் நுழைந்தான்.

பின்னாலேயே ஓடிவந்த சுகந்தி அவன் லுங்கிக்கு மாறி பாத்ரூம் போய்விட்டு ஷோபாவிற்கு வந்தமரும் வரை ‘ என்ன பிரச்சனை’ என்பதில் ஆரம்பித்து யார் பக்கம் தவறு, யார் வேண்டுமென்றே வம்புக்கிழுக்கிறார்கள் என்பது வரை சொல்லி முடித்தாள்.

” ஏம்மா ஒரு நாளாவது சுகந்தி கூட சண்டை போடாம உங்களால இருக்கவே முடியாதா?”

தாயைப்பார்த்து கேட்டான் தனபால்.

” ம்…வந்தவுடனே உன் காதுல மகுடி ஊதி உன்னை பொட்டிப்பாம்பா ஆக்கிட்டாளா…? ஹ்ம்.. இனி நான் சொல்லி நீ எங்க கேட்கப்போற போ..”

“அம்மா… ஏழெட்டு வருஷமா இந்த வசனத்தை கேட்டு கேட்டு புளிச்சுப்போச்சும்மா. ரெண்டு பேரும் எப்பத்தான் ஒத்துமையா ஒண்ணு சேருவீங்க. மனசு ரொம்ப வலிக்குதம்மா”

சம்பூர்ணம் அதற்கு மேல் அங்கு அமர்ந்திருக்கப் பிடிக்காமல் மொட்டை மணிக்கு நடந்தார்.

சுகந்தி பக்கத்து வீட்டில் போய் விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தைகளை அழைத்து வந்து பாடம் படிக்கச் சொல்லி அவர்கள் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.

மறுநாள்.

காலை மணி 9.30.

அலுவலகத்துக்கு புறப்பட்டு விட்ட தனபால் ஷோபாவில் அமர்ந்து கொண்டு ,” அம்மா,

உங்களுக்கும் சுகந்திக்கும் ரொம்ப வருஷமாவே ஒத்து வரவே மாட்டேங்குது. அவ செய்யற சமையலை பத்தி, செலவு பண்றதைப்பத்தி, குடும்பம் நடத்தறதைப் பத்தி, உங்களை கவனிக்கிறதில்லைங்கிறதைப் பத்தி அவ அக்கம் பக்கம் பழகறதைப் பத்தி அவங்கப்பா அள்ளி அள்ளி கொடுக்கிறதில்லைங்கிறதைப் பத்தி…

இப்படி அவளை ரொம்ப டார்ச்சர் பண்றீங்க. அதனால உங்களை அம்பத்தூர்ல இருக்கிற ஒரு நல்ல முதியோர் இல்லத்துல கொண்டு போய் சேர்த்திடலாம்னு நான் முடிவு பண்ணியிருக்கேன். என்ன சொல்றீங்க, சம்மதமா?”என்று

சம்பூர்ணத்திடம் கேட்டான்.

தனபாலுக்கு எதிர் ஷோபாவில் அமர்ந்திருந்தார் அவர்.

” ஓ…ஹோ.. நைட்டு உன் பத்தினி தலையணை மந்திரம் ஓதிட்டாளா? ஒரே மகன் குத்துக் கல்லாட்டம் இருக்கும் போது என்னை முதியோர் இல்லத்துல சேர்க்கச்சொல்லி சிபாரிசு செஞ்சுட்டாளா? அடி பாதகத்தி.. உன்னை மருமகளா கொண்டு வந்ததுக்கு இது தான் நீ எனக்கு தர்ற பரிசாடி?”

இதற்கு பதில் சொல்ல சமையலறையிலிருந்து ஓடி வந்தாள் சுகந்தி.

அவளின் வேகத்தை பார்த்து,

” உஸ்ஸ்ஸ்…!” என்று வாயில் விரலை வைத்து ஜாடை காட்டினான் தனபால்.

” அம்மா… நான் சொந்தமா என் மூளையால யோசிச்சு சொன்னதை ஏம்மா அவ சொல்லிக் கொடுத்ததா அவ மேல பழியப் போடறீங்க?இதுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லைம்மா”

” ச்சீ போடா… பெத்த தாயை எந்த மகனுக்காவது முதியோர் இல்லத்துல சேர்க்க மனசு வருமா? இது நீ எடுத்த முடிவு இல்ல. சரி பயப்படாத; சுகந்தி சொல்லித்தான் இப்படியொரு முடிவுக்கு வந்தேன்னு தைரியமா என்கிட்ட சொல்லுடா. அவ என்னத்தை கிழிச்சிடப் போறாங்கிறதையும் பாத்திர்றேன்.”

இந்த பேச்சு சுகந்திக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. அதே சமயம் இப்போது என்ன பதில் பேசினாலும் பிரச்சினை வேறு திசைக்கு மாறும் என்பதை உணர்ந்து கணவனிடம், ” ஏங்க அத்தையும் நானும் சண்டை போடறது உண்மை. ஆனா அவங்களை முதியோர் இல்லத்துல கொண்டு போய் சேர்க்கிற அளவுக்கு நான் கல்நெஞ்சக்காரி இல்லீங்க. நீங்க முதியோர் இல்லம்கிற வார்த்தையை வாபஸ் வாங்குங்க.

நான் இனிமேல் அத்தை என்ன சொல்லி திட்டினாலும் பதில் பேசாம சண்டை போடாம அடங்கிப்போயிடறேன்.

எனக்கும் அம்மா, அப்பா,அண்ணன்கள் இருக்கிறாங்க.

அத்தை முதியோர் இல்லத்துக்கு போற அளவுக்கு நான் தான் பிரச்சினை பண்ணினேன்னு எங்க அண்ணன்களுக்கு தெரிஞ்சா வந்து என்னை வெட்டிப்போட்டுருவாங்க.”

தனபால் அமைதியாக சுகந்தியை பார்த்தான்.

” நீ ஏன் இப்ப டென்சன் ஆகறே. .நீ போய் உன் மத்த வேலைகளை பார். நான் என் அம்மா கூட கொஞ்சம் பேசனும்.”

” அத்தை மட்டுமில்ல அக்கம்பக்கத்துல ஊர் உலகத்துல ஏன் எங்கம்மா அப்பா என்னை தப்பா நினைக்கிற மாதிரியொரு முடிவை எடுக்காதீங்க. ப்ளீஸ்!”

” எல்லாம் எனக்குத்தெரியும் நீ உள்ள போ!”

இப்போது தன் தாயின் பக்கம் திரும்பினான்.

” இப்போ சுகந்தி பேசறதைக் கேட்டீங்களாம்மா? நான் ஒரு யோசனையை சொந்தமா எடுத்தாக்கூட அது உங்களால சுகந்தியை பாதிக்குது. புரியுதாம்மா?”

இதற்கு பதில் சொல்லாமல் கண்களை உருட்டினார் சம்பூர்ணம்.

” நானோ சுகந்தியோ ஒரு வெறுப்புல இந்த வீட்டை விட்டு போனா குழந்தைகள் பாதிக்கப்படுவாங்கம்மா.

அதனாலத்தான் உங்களை சுகந்திகிட்டயிருந்து பிரிச்சு முதியோர் இல்லத்துல பத்திரமா கொண்டு போய் சேர்த்திடலாம்னு நானே சொந்தமா நைட்டெல்லாம் யோசிச்சுத்தான் இப்ப சொல்றேன். உங்களால சுகந்தி கூட சண்டை போடாம இருக்க முடியாது. அதனால நாளைக்கு உங்களை அந்த முதியோர் இல்லத்துல சேர்க்கிறதுனு முடிவு பண்ணிட்டேன்.

ரெடியாகிக்குங்க.”

ஷோபாவிலிருந்து எழுந்து அலுவலகத்துக்கு போக கிளம்பிய போது ” கொஞ்சம் இருங்க” என்ற குரல் கேட்டு திரும்பினான் தனபால்.

பெட்ரூமிலிருந்து கையில் சூட்கேஸோடு வெளிப்பட்டாள் சுகந்தி.

” அத்தை இந்த வீட்டை விட்டுப்போக வேண்டாம். நான் நேத்து வந்தவள் நானே எங்கம்மா வீட்டுக்கு போறேன்.

‘ இனிமேல் அத்தை கூட சண்டை போட மாட்டேன்’னு

நேத்து நைட் சத்தியம் பண்ணினேனே.. அப்ப என்மேல உங்களுக்கு நம்பிக்கையே இல்ல. தண்டனையை நான் ஏத்துட்டு வெளிய போறேன். அத்தை சுகர் பேஸன்ட். அவங்களை ஏன் துரத்தி அசிங்கப்படுத்திறீங்க.

நான் புறப்படறேன்.வர்றேங்க அத்தை!”

ஹாலிலிருந்து வெளியேறி வீட்டை விட்டு வாசலில் நடக்க ஆரம்பித்தாள் சுகந்தி.

செய்வதறியாது திகைத்து ஆடிப்போனான் தனபால்.

” டேய்.. டேய்.. தனபால் என்னை மன்னிச்சிடுடா. முதல்ல போய் சுகந்தியை வீட்டுக்கு கூட்டிட்டு வா.போடா…!” கத்தினார் சம்பூர்ணம்.

தனபால் ஓடிச்சென்று கெஞ்சிக் கூத்தாடி பெட்டியை பிடுங்கி வீட்டுக்குள் அழைத்து வந்தான் சுகந்தியை.

“அம்மா சுகந்தி… என்னை மன்னிச்சுடும்மா. உன் அருமையை இந்த எட்டு வருஷமா தெரிஞ்சுக்காம இருந்திட்டேன். என் மகனே என்னை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும்படி புத்தி கெட்டு போய் நடந்துக்கிட்டேன்.

இனி மேல் நீ என் மருமகள் இல்லை; மகள் ! உன் மனசு நோகாம இனிமேல் நடந்துக்கிறேன்.

டேய் தனபால்…

நான் ஒரு நல்ல மாமியாரா, நல்ல அம்மாவா பேர் எடுக்க எனக்கு ஒரு மாசம் அவகாசம் கொடுடா. அப்படி எடுக்கலேனா நீயே என்னை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிடு! ப்ளீஸ்டா!”

” அம்மா!” என்றபடி தாயின் காலில் விழுந்தான் தனபால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *