அரசியல் சட்டத்தைமாற்ற துடிக்கிறது பா.ஜ.க.
சென்னை, ஏப். 14–
அம்பேத்கர் 134வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், தமிழச்சி தங்பாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அரசியல் சட்டத்தை
மாற்ற துடிக்கும் பா.ஜ.க.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது! புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை! பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது! நாட்டை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.