14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
சென்னை, செப். 14–
அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்டோரை அருவருப்பான முறையில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆன்மிக சொற்பொழிவாளர் என சொல்லப்படும் ஆர்.பி.வி.எஸ்.மணியன், 2 நாள் முன்னர் சென்னை தியாகராயர் நகரில், பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அப்போது அம்பேத்கர், திருவள்ளுவர், தமிழ்நாட்டு தலைவர்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் பற்றியும் அந்த நபர் கேவலமான முறையில் அருவருப்பாக பேசி அவமதித்துள்ளார்.
அதிகாலையில் கைது
அதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களாக, அந்த நபருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல்வேறு கண்டனங்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அருவருப்பாக பேசியதாக ஆர்.பி.வி.எஸ்.மணியனை, சென்னை தியாகராயர் நகரிலுள்ள அவரது வீட்டிலேயே இன்று அதிகாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் மணியனை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். செசன்ஸ் நீதிபதி அல்லி, 27 ந்தேதி வரையில் மணியனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து மணியன் சிறையில் அடைக்கப்பட்டார்.