சினிமா

‘அம்பேத்கர் இழுத்து நிறுத்திய தேரை முன்னோக்கி இழுத்துச் செல்வேன்’’; சினிமா டைரக்டர் ரஞ்சித் உறுதி

சென்னை, செப்.10–

‘‘யாரையும் எதிர்த்து நிற்பது என் நோக்கமல்ல, அனைவருடனும் கைகோர்த்து உரையாடவே நான் விரும்புகிறேன்’’ இயக்குநர் பா.இரஞ்சித் கூறினார்.

‘அம்பேத்கர் இழுத்து நிறுத்திய தேரை, முன்னோக்கி இழுத்துச் செல்வேன்’ என்று அவர் உறுதிபடக் கூறினார்.

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், “ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள் தான் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் ஒரு விசயத்தை வேதனையோடு சொன்னார். நான் கஷ்டப்பட்டு ஒருதேரை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன். தயவு செய்து அதைப் பின்னோக்கி இழுத்து விடாதீர்கள் என்று சொன்னார். நிச்சயமாக அந்தத் தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன். அதற்கான ஆரம்பம் தான் இந்தப் “பரியேறும் பெருமாள்” படம் என்றார்.

எனக்கிருக்கிற வாய்ப்புகளில் தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள முரண்களை முரணை உடைக்கிற வேலையை செய்வேன். இதனால் என் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களையும் தாண்டி, சில வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது.

இந்தப் படம் உருவாவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ராம். கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிஜீஸ் என படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது என்றும் கூறினார்.

யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத் தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும்.

அந்தளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித் தந்திருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசை படத்திற்கு மிக முக்கியமான தூணாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் எனக்கு பிடித்த, நான் நம்புகிற சினிமாவாக பரியேறும் பெருமாள் வந்திருக்கிறது”.

இவ்வாறு உணர்ச்சிகரமாக பேசினார் ரஞ்சித்.

இயக்குனர்கள் ராம், மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் ஆகியோர் பேசினார்கள். மக்கள் தொடர்பாளர் குமரேசன் வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *