செய்திகள்

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்

Makkal Kural Official

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

இருஅவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, டிச. 18–

அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல், பிரியங்கா ஆகியோர் தலைமையில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில் நேற்று அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்.

அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க. மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

அம்பேத்கார் படத்துடன்…

இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை கூடியபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அம்பேத்கரை பற்றி அமித்ஷா சர்ச்சையாக பேசினார் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டைதெரிவித்து தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இரு அவைகளிலும் ஜெய் பீம், ஜெய் பீம்.. என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டதால் பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர்கள் அறிவித்துள்ளனர்.

இதேபோன்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அக்கட்சியின் தலைவர் மல்லிக்கார்ஜூன கார்கே, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அம்பேத்கரின் புகைப்படங்களை கைகளில் ஏந்தியபடி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சிற்பியை அமித்ஷா அவமதித்துவிட்டதாகவும் தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பதவி விலக வேண்டும்: கார்கே

இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அம்பேத்கரையும் அரசியலமைப்பையும் அமித்ஷா அவமதித்துள்ளார். இதன் மூலமாக மனுஸ்மிருதி, ஆர்எஸ்எஸ் பற்றிய அவரது சித்தாந்தம், அம்பேத்கரின் அரசியலமைப்பை மதிக்க விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இதற்கு அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.நேற்று அமித்ஷா பேசும்போது, நான் பேசுவதற்கு அவையில் அனுமதி கேட்டு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது, ​​அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததால், அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் அமைதியாக இருந்தோம்.

அமித் ஷா பேசியதற்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷாவின் பேச்சை கண்டித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், “அரசியலமைப்பு விவாதத்தின் போது நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை இழிவுபடுத்திவிட்டார். பா.ஜ.க.வினருக்கு அம்பேத்கர் மீது மரியாதை இல்லை என்பதையே இது காட்டுகிறது. அம்பேத்கரின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும், அவர் வாழ்ந்த காலத்தில் அவர் எழுப்பிய பிரச்சினைகளுக்கு ஆதரவாகவும் இந்தியா கூட்டணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது” என கூறினார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்சினையாகத்தான் தெரிவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.ஜெய்ராம் ரமேஷ் ஷா கூறுகையில், “இந்தக் கருத்துகள் மிகவும் அருவருப்பானது. அம்பேத்கர் மீது பாஜக-ஆர்எஸ்எஸ் கொண்டுள்ள வெறுப்பை இது காட்டுகிறது. மக்கள் அவர்களுக்கு பாடம் கற்பித்துவிட்டதால், தற்போது அம்பேத்கர் பெயரைக் கூறுபவர்கள் மீது எரிச்சல் அடைந்துள்ளனர். இது வெட்கக்கேடானது. இதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், “உள்துறை அமைச்சர் அம்பேத்கரை அவமதித்ததன் மூலம், மூவர்ணக் கொடிக்கு பா.ஜ.க.–ஆர்எஸ்எஸ் எதிரானவர்கள். அவர்களின் முன்னோர்கள் அசோக சக்ராவை எதிர்த்தார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களுக்கு, அம்பேத்கர் கடவுளைவிடவும் குறைவானவர் இல்லை. தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஏழைகளின் தூதுவர் அம்பேத்கர் என்பதை பிரதமர் மோடி அரசின் அமைச்சர்கள் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.க. குற்றச்சாட்டு

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சிஆர் கேசவன், ​​“நேற்றைய பேச்சு, அரசியலமைப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செய்த வரலாற்று துரோகங்களையும், மன்னிக்க முடியாத பாவங்களையும் அம்பலப்படுத்தியது. காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்து, குடும்ப அரசியலை வலுப்படுத்த நமது அரசியலமைப்பை மாற்றியமைக்க முயற்சித்தது” என குற்றம் சாட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *