செய்திகள்

அம்பன் சூறாவளி புயல்: தமிழகத்திற்கு பாதிப்பில்லை

Spread the love

அம்பன் சூறாவளி புயல்: தமிழகத்திற்கு பாதிப்பில்லை

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

 

சென்னை, மே 18–

அம்பன் சூறாவளி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (18–ந் தேதி) சென்னை எழிலகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் அம்பன் சூறாவளி புயல் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

முதலமைச்சரின் அறிவுரையின் படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு இணைந்து இந்த தென்மேற்கு பருவமழை தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் நிருவாக ஆணையர் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்று காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி கடந்த 16.5.2020 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து வலுப்பெற்ற தீவிர சூறவளிப்புயல் “அம்பன்” தற்போது அதிதீவிர சூறாவளிப் புயலாக மாறி தெற்கு வங்காள விரிகுடாவில் மத்தியப் பகுதியிலிருந்து வடக்கு வடகிழக்காக மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கின்றது.

இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள பாராதீப் துறைமுகத்திலிருந்து தெற்கே 820 கி.மீ தூரத்திலும் மேற்கு வங்காளத்தில் உள்ள திகா என்ற இடத்திலிருந்து தெற்கு தென்மேற்காக 980 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது மேலும் வடக்கு வடகிழக்காக நகர்ந்து வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் மேற்கு வங்காளத்தை கடக்கும்.

கடல் சீற்றம்

மத்திய, தெற்கு மற்றும் வடக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் கடல் மிகவும் சீற்றத்துடனும் அலைகள் அபாயகரமான அளவில் உயர்ந்து காணப்படும்.

மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்காள விரிகுடா பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் இன்று 18–ம் தேதி மத்திய வங்காள விரிகுடா பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் இன்று முதல் 20–ம் தேதி வரை வடக்கு வங்காள விரிகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை உயர்ந்தபட்ச வெப்பநிலை குறித்து எச்சரிக்கை ஏதும் இல்லை.

கொரோனா வைரசுக்காக சமூக இடைவெளி பொதுமக்களிடையே கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால் நிவாரண முகாம்களை அதிகப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு

பாதிப்பு இல்லை

தமிழக முதல்வரின் அறிவுரையின் படி தென்மேற்கு பருவமழை இடி, மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள் உயிரிழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்த அவசர கட்டுப்பாட்டு மையம் மூலம் வருவாய் நிர்வாக ஆணையர் மூலம் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த புயல் தொடர்பான சேட்டலைட் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புயல் தொடர்பாக எந்த பாதிப்பும் தமிழகத்திற்கு இல்லை என தெரியவருகிறது.

இருந்த போதிலும் இந்திய வானிலை மையத்தோடு இணைந்து நாங்கள் இப்புயல் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதன் தொடர் நடவடிக்கையாக அன்றாட நிலவரங்கள் பொதுமக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படும். கொரோனா தொடர்பாக சிறப்பாக பணியாற்றிவரும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக தென்மேற்கு பருவமழை தொடர்பாகவும் அறிக்கைகள் பெறப்பட்டுவருகின்றன.

100 -நாள் வேலைவாய்ப்புத்திட்டம் முழுமையாக நூறு சதவிகிதம் செய்வதற்கு முதல்வர் தெரிவித்துள்ளார். மண்பான்ட தொழிலார்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டாட்சியர் மூலம் வண்டல் மண் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் நீர் மேலாண்மை நிலத்தடிநீர் பெருகுவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்பேட்டியின் போது வருவாய் நிருவாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜெகந்நாதன் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *