புதுடெல்லி, டிச.25–
‘இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை உண்டாக்கட்டும்’ என பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை உண்டாக்கட்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
த.வெ.க. தலைவர் விஜய்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.இதற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்ற்னர். அதன்படி, தற்போது தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும். அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்’ என அவர் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவப் பெருமக்களுக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘உங்கள் பகைவரிடமும் அன்பு காட்டுங்கள். உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் என்கிறார் இயேசுபிரான். இதனை நாம் அனைவரும் கடைபிடித்தால் நாட்டில் அன்பு பெருகி, அமைதி அதிகரித்து, சமாதானம், சகோதாரத்துவம் ஆகியவை தழைத்து வேற்றுமை அழிந்து ஒற்றுமை உருவாகும். இந்த ஒற்றுமையை உருவாக்கி, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல நாம் அனைவரும் இந்த நாளில் உறுதி ஏற்போம்’ என்றார்.
விஜய் வசந்த் எம்.பி.,
விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சகோதரர்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
உலகின் பாவங்களை சுமக்க மனிதனாக உலகில் வந்து பிறந்து, மக்களுக்கு நல்வழியை போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குதூகலத்துடன் கொண்டாடப்படும் தினம். இந்த தினத்தை ஒளி ஒலியுடன், இனிப்புகளை வழங்கி, விருந்து உபசரித்து கொண்டாடும் இந்த நாளில் கர்த்தரின் அருள் உங்கள் அனைவரது வாழ்விலும் நிறைந்து சிறக்க வேண்டுகிறேன்.
இந்நாளில் யேசுபிரானின் போதனைகளை கருத்தில் கொண்டு அன்பை பரப்புவோம். வெறுப்பை அகற்றி அனைவரையும் நேசிப்போம். இல்லாதவர்களுக்கு வாரி வழங்குவோம். நமக்கு கிடைத்த மகிழ்ச்சியும் வளமும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என மனதில் பிரார்த்திப்போம். உங்கள் இல்லங்களில் மிளிரும் ஒளி விளக்குகள் போல் உங்கள் வாழ்விலும் ஒளி மிளிர வேண்டுகிறேன். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
வி.கே. சசிகலா
வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
கருணையே வடிவான, கர்த்தராகிய இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவி அம்மா தான், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதியுதவி அளிக்கும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் என்பதை இந்நன்னாளில் எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
அனைவரிடத்தும் அன்பு காட்டி, கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன், ஒற்றுமையாக வாழ வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.