செய்திகள்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைன், ரஷ்ய அதிபர்களை சந்திக்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர்

ஜெனீவா, ஏப்.23–

ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரேஸ் அடுத்த வாரம் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களை சந்திக்க இருக்கிறார்.

வரும் 26–ந்தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், 29–ந்தேதி அன்று உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியையும் வெளியுறவு அமைச்சர் குலேபாவையும் அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பை ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்த சந்திப்புகளை சாத்தியமாக்க வேண்டும் என்று ரஷ்யா, உக்ரைனுக்கு ஐ.நா. சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24–ம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதலால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா நாடுகள் மத்தியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காரணம், ரஷ்ய தாக்குதல் மேற்கத்திய அத்துமீறலுக்கு எதிரானது என்று கூறி சீனா ஒதுங்கிவிட்டது. கவுன்சிலில் உள்ள மற்ற மூன்று நாடுகளும் ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. இவ்வாறாக பாதுகாப்பு கவுன்சிலில் பூசல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சு வார்த்தையை தொடங்கி வைப்பதற்காகவே இந்தப் பயணத்தை பொதுச் செயலாளர் மேற்கொள்வதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ள நிலையில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்க பொதுச் செயலாளர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.