சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை, செப். 4–
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. இந்த நிலையில் புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய நிலையில், அந்த வழக்கை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன்பின் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமும் இதை விசாரிக்க மறுத்து விட்டது. மேலும், ஜாமீன் மனுவை தாம் விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறும் சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.அப்போது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆர் . சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில் இந்த முறையீட்டை எப்படி ஏற்பது? என நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என நீதிபதி எம்.சுந்தர் கூறினார்.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் முறையிடப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதே தவறு. அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜாமீன் மனுவையும் விரைந்து முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.