செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

8 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி

சென்னை, ஜூன் 17–-

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை கடந்த 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவு செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஐகோர்ட் உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதான செந்தில்பாலாஜியை வருகிற 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்காக தங்கள் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அமலாக்கத்துறை துணை இயக்குனர் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அமலாக்கத்துறை சிறப்பு வக்கீல் ரமேஷ் ஆகியோர், ‘செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பண விவகாரம் தொடர்பான விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டார். குறிப்பாக கைது ‘மெமோ’வை கூட அவர் பெற மறுத்தார். போக்குவரத்து கழக பணி நியமனம் தொடர்பாக அவர் பெற்ற பணம் தொடர்பாக அவரிடம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டியது உள்ளது. எனவே 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கும் வகையில் அமலாக்கத்துறை வசம் அவரை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’ என வாதாடினர்.

அதேவேளையில் செந்தில்பாலாஜியிடம் காணொலி காட்சி மூலம் அமலாக்கத்துறையின் காவல் கோரிய மனு குறித்து அவரது விருப்பத்தை நீதிபதி கேட்டார். அதற்கு செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை காவலில் செல்ல விருப்பம் இல்லை என தெரிவித்தார்.

வீடியோ கால் மூலம்செந்தில் பாலாஜி ஆஜர்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, நேற்று மாலை இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். காவல் கோரிய வழக்கில் தீர்ப்பு பிறப்பிக்கும்போதும், காவல் கோரிய நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் புழல் சிறைத்துறை அலுவலர்கள் காணொலி மூலம் செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதி (செந்தில்பாலாஜியை கணினி வழியாக பார்த்து), ‘செந்தில்பாலாஜி… உங்களை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி அமலாக்கத்துறை கோரி உள்ளது. உங்களை இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 23-ந் தேதி வரை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளேன்’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட செந்தில்பாலாஜி, ‘எனது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஓரிரு நாட்களில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி வழங்கினால் எனது உடல்நிலை மோசமாகி விடும்’ என்றார்.

8 நாள் காவலில்

விசாரணை

அதற்கு நீதிபதி, உங்களது மருத்துவ சிகிச்சைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில்தான் அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. தீர்ப்பு நகல் உங்களுக்கு வழங்கப்படும் என்றார். அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. செந்தில்பாலாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவரை ஆஸ்பத்திரியை விட்டு வேறு எங்காவது அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றால் அவரது சிகிச்சை பாதிக்கப்படும். எனவே, அமலாக்கத்துறை காவல் விசாரணை குறித்து தெளிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்றார்.

அப்போது நீதிபதி, ‘தீர்ப்பை முழுமையாக படியுங்கள். அதில் அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீர்ப்பை படித்த பின்பு முறையிடுங்கள்’ என்றார்.

இதைத்தொடர்ந்து, 8 நாட்கள் விசாரணைக்கு பின்பு 23-ந் தேதி மாலை 3 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்தபடியே செந்தில்பாலாஜியை காணொலி மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அமலாக்கத்துறை விசாரணையை பொறுத்தமட்டில் செந்தில்பாலாஜியின் மருத்துவ சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் மருத்துவமனையில் வைத்தே நடைபெற வேண்டும் என்றும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அமலாக்கத்துறை விசாரணையில் அசவுகரியம் ஏதும் ஏற்பட்டால் செந்தில்பாலாஜி தரப்பு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

ஜாமீன் மனு தள்ளுபடி

இதற்கிடையே ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.அல்லி விசாரித்தார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்ற செந்தில்பாலாஜியின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *