பறிமுதல் செய்த பொருட்களை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை, ஜூலை 25–
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்துள்ள ஐகோர்ட், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற ரூ.30 கோடி கடன் தொகையை தனது சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதால் வங்கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக்கூறி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் மற்றும் அவர் இயக்குநராக உள்ள நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டது.
இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரி என். ரவிச்சந்திரன் சென்னை ஐகோர்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரி்த்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, மனுதாரரான ரவிச்சந்திரனுக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதித்தும், அதில் ரூ. 15 லட்சத்தை சிபிஐ-க்கும், ரூ. 15 லட்சத்தை சமரச தீர்வுமையத்துக்கும் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அந்த வழக்கின் அடிப்படையில் பதியப்பட்ட அமலாக்கத்துறை வழக்கையும் ரத்து செய்யக்கோரியும், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தை திருப்பித்தரக் கோரி என்.ரவிச்சந்திரன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ‘சிபிஐ பதிவு செய்திருந்த மூல வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால், அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையால் பதியப்பட்ட இந்த வழக்கையும் ரத்து செய்கிறோம். பறிமுதல் செய்யப்பட்ட மி்ன்னணு சாதனங்கள் மற்றும் பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர்.
![]()





