இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான்
பணிக்கு செல்லும் பெண்கள் 42 சதம் பேர்
கடலூர், ஆக. 30–
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பணிக்கு செல்லும் பெண்கள் 42 சதவீதமாக உள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்று காலை கடலூரைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சரத் – நிவேதிதா திருமணம் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த திருமண விழாவினை தலைமையேற்று நடத்தி வைத்து பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “திமுகவின் முதல் பொருளாளரின் கொள்ளுப்பேரனின் திருமணம் இது. ஒரு காலத்தில் மகளிர் வீட்டை விட்டு வெளியே வரக்கூட உரிமையில்லை.
தமிழ்நாட்டில்தான் அதிகம்
அவர்களுக்கு படிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. இந்நிலையை மாற்றி மாற்றத்தை கொண்டு வந்த திராவிட இயக்கம் திமுக தான். மகளிருக்கு சொத்தில் சம உரிமை என இந்தியாவிலேயே முதலில் சட்டம் கொண்டு வந்தவர் கருணாநிதி தான். பல திட்டங்களால் உயர் கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கிய ஓராண்டில் 1.16 கோடி பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 42 சதவீதம் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். மணமக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒருவர் மற்றவரை சுயமரியாதையுடன் நடத்த வேண்டும். பிறக்கும் குழந்தைக்கு நல்ல தமிழ் பெயரை வையுங்கள்” என்று அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் வைத்தார்.