சென்னை, செப். 6–
சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், உயர்நீதி மன்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்தது. பின்னர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என அமைச்சர்கள் தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மற்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்வதாகக் கூறி , சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
நீதிபதி உத்தரவுக்கு தடை
பின்னர் ஆகஸ்ட் 7 ந்தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசுவின் மனைவி ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என திருவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு, தினசரி விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவருடைய மனைவி டி.மணிமேகலை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கில், மனுதாரர்கள் சார்பாக, அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, கபில் சிபல், முரளிதர் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். 2 நீதிபதிகள் விசாரிப்பதற்கு பதில் தனி நீதிபதி விசாரிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு தரப்பிலும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தனர்.