செய்திகள்

அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதி செல்போன்கள் ஒட்டுக்கேட்பு

புதுடெல்லி, ஜூலை 19–

2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதி, தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் இஸ்ரேலிய உளவுமென்பொருளான பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது.

பிரான்சை சேர்ந்த லாபநோக்கமற்ற அமைப்பான பர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து இதை வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் கண்காணிப்பு நிறுவனமான என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் செயலி மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் அரசுக்கு விற்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இதை மத்திய அரசு மறுத்துள்ளது. குறிப்பிட்ட யாரையும் உளவு பார்க்கவில்லை, அவர்களின் செல்போனும் ஒட்டுக் கேட்கப்படவில்லை. இது எந்தவிதமான அடிப்படையான வலுவான ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டு என்று மத்திய அரசு மறுத்துள்ளது.

வளமான ஜனநாயகத்தை கொண்ட இந்தியாவில், ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரின் தனிப்பட்ட உரிமையைப் பாதுகாக்க அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆதலால் ஆதாரமற்ற இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன், லி மான்டே உள்ளிட்ட 16 சர்வதேச ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து இதை வெளியிட்டுள்ளனர். உலகளவில் 50 ஆயிரம் பேரின் செல்போன் எண்கள் இஸ்ரேலின் கண்காணிப்பு நிறுவனமான என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் செயலி மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒட்டு கேட்பில் கசிந்த செல்போன் எண்கள் குறித்து தடவியல் பரிசோதனை நடத்தப்பட்டதில், 37 செல்போன் எண்களில் 10 எண்கள் இந்தியர்களுடையது என்று தெரிய வந்திருக்கிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கும்நிலையில் இந்த விவகாரம் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை மக்களவையிலும், மாநிலங்களையும் எழுப்பி எதிர்க்கட்சிகள் பெரிதாக பிரச்சினையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஒத்திவைப்பு விவாதம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர்கள்

தி வயர் இணையதளம் வெளியிட்ட செய்தியின்படி, “இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நீதிபதி ஒருவர், மத்திய அமைச்சரவையில் இரு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியலமைப்புச் சட்ட பதவியில் இருப்போர் என பலருடைய செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *