சென்னை, பிப். 10–
தமிழக பட்ஜெட் தொடர்பாக விவாதித்து முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழக அரசின் 2025–2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து விவாதிக்கப்பட்டது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டியவை முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சர்கள் துறை ரீதியாக ஆய்வு செய்து, கருத்துகளைப் பெற்றுள்ளனர். அந்தக் கருத்துகள் இந்த அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டு அமைச்சரவை கூட்டத்தின் முடிவில், பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் தரப்படும்.
அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பு கடைசியாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான். அதனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில்கள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள தொழில்கள் ஆகியவற்றிற்கும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. அதனால் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை காரணம் காட்டி, உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார். இதையடுத்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம், கடந்த ஜனவரி 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11ம் தேதி பதில் அளித்தார். அதில் மொத்தம் 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், 2025–2026ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல் நாளில் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்வார்கள்.