சென்னை, செப். 24–
உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் இன்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அமைச்சரவை மாற்றம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கோருவது பற்றி முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின், “வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஏற்கெனவே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அதுவே வெள்ளை அறிக்கைதான். வெளிநாட்டு முதலீடுகள் ஏதும் ஏமாற்றும் திட்டங்கள் அல்ல. அண்ணா தி.மு.க. ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என்று அனைவரும் தெரியும். அண்ணா தி.மு.க.வை போல் நாங்கள் ஏமாற்றும் நிதி முதலீடுகளை பெறவில்லை என்றார்.
வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. 2 நாட்களில் மாவட்ட கலெக்டர்களுடன் பேச உள்ளேன். கொளத்தூர் எனது சொந்த தொகுதி. நினைத்த நேரத்தில் இங்கு வருவேன் என்றும் ஸ்டாலின் கூறினார்.
நீண்ட நாட்களாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவிவரும் நிலையில் மாற்றம் இருக்கும் என ஸ்டாலின் தெரிவித்திருப்பது தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.