செய்திகள்

அமெரிக்க வாழ் 12 வயது தமிழ்ச் சிறுமி மாத்வி சித்தூர்: “மாடு மேய்க்கும் கண்ணே…” ஆடலை மறக்க முடியுமா…?

“பகலவனுக்கு அடியில் எல்லாமே சாத்தியம், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை”– அனுபவ மொழி இது. இதை வெற்றிகரமாக நிரூபித்திருக்கிறார் 12 வயது மாத்வி சித்தூர், தன் பெற்றோர்கள் லலிதா – சித்தூர், குரு கவிதா சீனிவாசன் ஆகிய மூவரின் உந்துதலில், ஊக்குவிப்பில், உற்சாகமூட்டும் நம்பிக்கை தரும் வார்த்தைகளில்

30 நாட்களில் ஹிந்தி கற்கலாம், 30 நாட்களில் தெலுங்கு – மலையாளம் கற்கலாம்… என்று அதற்கான புத்தகங்களை வாங்கி 30 நாட்களில் கொஞ்சம் கொஞ்சம் பேச பழகிக் கொள்வதைப் போல, 30 நாட்களில் இரண்டரை மணி நேரம் பயிற்சி எடுத்து உருப்படிகளைக் கற்று சென்னையில் முகாமிட்ட நேரத்தில் சலங்கை பூஜையில் மேடை ஏறி இருக்கிறார் மாத்வி சித்தூர் என்றால் பாராட்டாமல் இருந்தால் எப்படி?! (அமெரிக்காவில் துவக்க நிலை பயிற்சி) அரங்கேறிய இடம்: மயிலை ஆர் ஆர் சபா மினி ஹால். சிறப்பு விருந்தினர்: மக்கள் குரல் வி. ராம்ஜீ.

அமெரிக்காவில் டென்வர் மாநிலத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து இன்று ஏழாம் வகுப்பு படித்து வருபவர் மாத்வி. சலங்கை பூஜையை சென்னையில் தான் நடத்த வேண்டும் என்று தீர்மானித்து அதன்படியே நடத்தி இருக்கிறார்கள் லலிதா – சித்தூர் தம்பதி.

26 ஆண்டுகள் பழுத்த அனுபவ ஆசான் கவிதா சீனிவாசன்( எஸ் கே நாட்டிய கலா நிகேதன் அகாடமியின் நிறுவனர்- இயக்குனர்) 40 மாணவிகளுக்கு அரங்கேற்றம் நடத்தி இருப்பவர், 500 மாணவ மாணவிகளை பயிற்றுவித்து வருபவர். பட்ட மேற்படிப்பு பட்டம்( நுண் கலை), முனைவர் பட்டம் பெற்றவர் மாத்வி. மேடை ஏறி ஆடப்போகும் ஒவ்வொரு பாடலுக்கான பொருளையும் அதற்கான உணர்வுகளையும் குரு கவிதா எடுத்துச் சொல்ல, அதை தாய் லலிதா ஆங்கிலத்தில் புரியும் விதத்தில் விளக்க- அந்த அனுபவ பயிற்சி முடிவில் மேடை ஏறினார் மாத்வி.

“கண நாதனே…” என்று கணீர் குரலோடு முனைவர் சுபஸ்ரீ குரல் எடுத்துப் பாட இறை வணக்கத்தோடு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. அலாரிப்பு, ஜதீஸ்வரம், முருகன் கவுத்துவம், தேவி நீயே துணை…, மாடு,மேய்க்கும் கண்ணே… “ என்று ஆறு உருப்படிகளின் முடிவில் மங்களத்தோடு நிறைவு, நிகழ்ச்சி.

முருகன் கவுத்துவத்தில் மயிலாக வந்தாரா இல்லை ஒயிலாக வந்தாரா? கேள்வி எழுப்ப வைக்கும், முருகனையே கண்களில் நிறுத்தினார்.

“தாயே நீயே துணை, மதுரை வாழ் மீன லோச்சனி…” பாடலில் கருணை- கனிவுப் பார்வை, தாயின் மகிமை: காட்டிய பாவம் பாராட்டைப் பெற்றது( பாரதவர்ஷா ஆடை அலங்காரம் ஓஹோ).

“மாடு மேய்க்கும் கண்ணே..” பாடலுக்கு ஒரு பக்கம் தாய் யசோதாவை சித்தரிக்கும் விதத்திலும் , இன்னொரு பக்கம் குட்டி கிருஷ்ணனை சித்தரிக்கும் விதத்திலும் இரு பாதியில் ஆடை அலங்காரம் -வித்தியாசம். குருவின் கற்பனைக்கு பாராட்டு,

யசோதாவின் கெஞ்சலும், குட்டி கிருஷ்ணனின் கொஞ்சலும்… விஷமக்கார கண்ணன், தாயின் கேள்விக்கு சூட்டிக்கையான பதிலைக் கொடுத்துவிட்டு அவள் பிடியிலிருந்து துள்ளி ஓடும் சேட்டையில் மாத்வி : மறக்க முடியுமா?!

முனைவர் சுபஸ்ரீ பாட்டு, ஹரிஹர சுதன் மிருதங்கம், பேட், திருமருகல் கணேஷ்குமார் – வயலின் பக்க வாத்தியக் கலைஞர்கள் மாத்விக்கு பலம்.

மாத்வியின் வசீகரம், உயரம் இரண்டையும் பார்க்கும் போது ஸ்ரீராமன்,- ஸ்ரீகிருஷ்ணன்,- ஸ்ரீதிருமால் அவதாரம் போட்டால்.. வைத்த கண் வாங்காமல் வெறிக்கப் பார்த்து ரசிக்க வைக்கும் எதிர்பார்ப்பு – எதிர்காலத்தில் செயல் வடிவம், நிச்சயம்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *