ஒட்டாவா, பிப். 2–
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து கனடா அரசு பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மேலும், பல்வேறு நாடுகள் மீதும் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கனடா பிரதமர் பதிலடி
இந்நிலையில், அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் வரி விதித்துள்ளது. இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாவது:–
“சில ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு உள்ளது. இந்த வரி விதிப்பு அமெரிக்க மக்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். 30 பில்லியன் கனடா டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு உண்டனையாக வரி விதிக்கப்படும். இதைத் தொடர்ந்து 21 நாட்களில் C$125 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது மேலும் வரிகள் விதிக்கப்படும். அடுத்த சில வாரங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு கடினமானதாக இருக்க போகிறது என்று தெரிவித்துள்ளார்.