செய்திகள்

அமெரிக்க பொதுமக்களில் ஏறத்தாழ 3 இல் ஒரு பகுதியினர் மதமற்றவர்கள்

அமெரிக்காவிலுள்ள எப்எப்ஆர்எப் நிறுவனர் டேனியல் பார்க்கர்

சென்னை, ஜன. 6–

அமெரிக்க மக்களில் 29 சதவீதம் பேர் தங்களை மதமற்றவர்கள் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளனர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த “மதத்தில் இருந்து விடுதலை அமைப்பின்” தலைவர் டேனியர் பார்க்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் மாகாணத் தலைநகர் மேடிசன் நகரைத் தலைமையிடமாக கொண்ட “மதத்தில் இருந்து விடுதலை அமைப்பின் (Freedom From Religion Federation) நிறுவனர்களில் ஒருவரான டேனியல் பார்க்கர், அமைப்பின் ஒருங்கிணைப்பு இயக்குநர் அமிதாப் பால் ஆகியோர், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பகுத்தறிவாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள், சுதந்திர சிந்தனையாளர்களை சந்தித்து பேச இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஒத்த சிந்தனையாளர்களை சந்தித்து இயக்க செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும், இணைந்து செயல்படவும் முடிவெடுத்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, நேற்று தந்தை பெரியாரின் திராவிடர் கழக செயல்பாடுகளை அறிந்து கொள்ள, மகாராஷ்டிர அந்தஸ்திரத நிர்மூலன் சமிதியின் தலைவர் அவினாஷ் பாட்டீலுடன் சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலுக்கு வந்ததுடன், வரவேற்பு கூட்டத்திலும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார். திராவிடர் கழக பொருளாளர் குமரேசன் திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியாரின் செயல்பாடுகள் குறித்து அறிமுக உரையாற்றினார்.

மதத்திலிருந்து 10 கோடி பேர் விடுதலை

நிகழ்ச்சியில், எப்எப்ஆர்எப் அமைப்பினர் இணை நிறுவனர் டேனியல் பார்க்கர் பேசியதாவது:–

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் 1978 ஆம் ஆண்டு மதத்திலிருந்து விடுதலை அமைப்பை நாங்கள் 3 பேர் இணைந்து தொடங்கினோம். மதம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பதை எடுத்துச்சொல்லி, பெண்கள் மதத்தில் இருந்து விடுபடாமல் முன்னேற முடியாது, சுயமரியாதையுடன் வாழ முடியாது என்பதை தொடர்ந்து பிரச்சாரம் செய்தோம். மேலும் இயக்கத்தின் முதன்மை நோக்கமாக அரசியலும் மதமும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்பதையும், கடவுள் மறுப்பு, பகுத்தறிவு சிந்தனை, மனிதநேயம் ஆகியவற்றை முன்வைத்து தொடர்ந்து இயங்கினோம். இப்போது எங்கள் இயக்கத்தில் 39 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

அதன் விளைவாக 1991 ஆம் ஆண்டில் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, மதமற்றவர்கள் என்று 7 சதவீதம் பேர் தங்களை பதிவு செய்துகொண்ட நிலையில், 2001 ஆம் ஆண்டில் 14 சதவீதமாகவும், 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 29 சதவீதம் பேர் (சுமார் 10 கோடி பேர்) தங்களை மதமற்றவர்கள் என்று பதிவு செய்துகொண்டுள்ளனர் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது அமெரிக்க மக்கள் தொகையில் ஏறத்தாழ 3 இல் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. நான் முன்னர் கிருஸ்தவ மத பிரச்சாரகனாக இருந்துள்ளேன். மதம் மனிதனின் சுயமரியாதைக்கு எதிரானது என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று டேனியல் பார்க்கர் கூறினார்.

தமிழ்நாடு, கேரளா முன்னேற்றம்

மதத்திலிருந்து விடுதலை அமைப்பின் ஒருங்கிணைப்பு இயக்குநர் அமிதாப் பால் பேசும்போது கூறியதாவது:–

நான் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி. எனது முன்னோர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள். இந்தியாவில் உள்ள வட மாநிலங்கள் எப்படி மதத்தில் இருந்து விடுபடாமல் பிற்போக்குத் தனமாக இருக்கிறார்களோ, அதேபோல் அமெரிக்காவிலும் அரெகன்ஸ், டெக்சாஸ், மிசிசிப்பி போன்ற மாகாணங்கள் மிகவும் பழமை வாதத்தால் மூழ்கி உள்ளனர். ஆப்ரிக்க அமெரிக்கர்களையும் ஐரோப்பிய அமெரிக்கர்களையும் வேறுபடுத்தி பார்க்ககும் இயல்புள்ளவர்களாகவே உள்ளனர். அதனால்தான், டொனால்ட் டிரம்ப் அந்த பகுதிகளில் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார்.

வட இந்தியாவில் மோடி செல்வாக்கு மிக்கவராக இருப்பதைப் போல், டிரம்ப் அமெரிக்காவின் தென்பகுதிகளில் செல்வாக்கோடு உள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழ்நாடும் கேரளாவும் மிகவும் முன்னேறிய மாநிலங்களாக, முற்போக்கு சிந்தனையாளர்களாக உள்ளனர். நாடு முழுக்க, உலகம் முழுக்க உள்ள மத, இன பிற்போக்காளர்களிடம் பரப்புரை செய்து அவர்களையும் மனிதர்களை பற்றி சிந்திப்பவர்களாக மாற்ற வேண்டும். அதற்கு இந்த பயணம் நிச்சயம் உதவியாக இருக்கும் என்றார்.

அறிவியல் மனப்பான்மை

நிறைவாக பேசிய திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, உலகம் முழுக்க உள்ள கடவுள் மறுப்பாளர்களும், மத மறுப்பாளர்களும் மனிதனை குறித்து சிந்திப்பவர்களாகவே உள்ளனர். மதம், கடவுள் மனிதனை பிரிக்கிறது. மனிதம் ஒன்றிணைக்கிறது. அதனால்தான் அமெரிக்காவில் இருந்து வந்துள்ள டேனியல், மகாராஷ்டராவில் இருந்து வந்துள்ள அவினாஷ் ஆகியோர் மானுட முன்னேற்றம் என்ற ஒரு புள்ளியில் இணைந்துள்ளோம். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் குடிமக்களுக்கான உரிமைகளை குறித்து கூறுவது போலவே, குடிமக்களுக்கான கடமைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை (Scientific temper) பரப்ப வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே நம்மைப் போன்ற இயக்கங்கள் செயல்படுகிறது என்று கூறினார்.

நிறைவாக, பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் வழக்கறிஞர் வீரமர்த்தினி, திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *