மாஸ்கோ, ஜூன் 7–
அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 61 பேர் மீது, ரஷ்யா பொருளாதார தடை விதித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 104 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனுடன் உக்ரைனுக்கு ஆதரவான நாடுகள் மீதும் ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரஷ்யா இப்போது அமெரிக்கா மீது மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவின் 61 அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
தடைக்கான காரணம்
“ரஷ்யாவை சேர்ந்த அரசியல், அரசியல் சாராத பிரமுகர்கள் மற்றும் உள்நாட்டு வணிகப் பிரதிநிதிகளுக்கு எதிராக அமெரிக்க பொருளாதாரத் தடைகளை விதித்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்துடன் மேற்குலக நாடுகளுக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனிற்கு தொலைதூர ராக்கெட்டுகளை வழங்கினால், ரஷ்யா பதிலடி கொடுக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் கூறினார்.
ரஷ்யாவின் தடைப் பட்டியலில் அமெரிக்க அரசுநிர்வாகிகள் மற்றும் பெரிய அமெரிக்க நிறுவனங்களின் முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர். இந்தப் பட்டியலில் நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன், எரிசக்தி அமைச்சர் ஜெனிஃபர் கிரன்ஹோல்ம், வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் கேட் பெடிங்ஃபீல்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ரீட் ஹேஸ்டிங்ஸ் போன்றவர்களின் பெயர்கள் உள்ளன.