தலையங்கம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5 நடைபெறும், ஆம் 30 நாட்கள் கூட கிடையாது! இம்முறை முன்னால் ஜனாதிபதி டிரம்புக்கு வாக்களிப்பதா? தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்சுக்கு ஜனாதிபதியாக பணியாற்ற சந்தர்பம் தருவதா? என்ற விவாதம் அமெரிக்க வாக்காளர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்!
இந்தக் கட்டத்தில் தான் கமலா ஹாரிஸின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது.
நாடளாவிய தேர்தல் கருத்துக் கணிப்புகள் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது எதிர் அணியில் உள்ள டொனால்ட் டிரம்ப் க்கும் இடையே கடுமையான போட்டாபோட்டி நிலவுகிறது எனக் கூறுகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில்தான் இருவரில் ஒருவர் சற்றே முன்நிற்கிறார்.
டிரம்பிற்கு வாக்களிக்க விரும்பாதவர்களில் பலருக்கு இருக்கும் ஒரு மன ஓட்டம் கமலா ஹாரிஸ் செயல்பாடுகள் ஜனாதிபதி பொறுப்புகளுக்கு தகுதியானதாக இருக்குமா?என்பதே.
அதை நிருபிக்க கமலா ஹாரிஸுக்கு இந்த நேரத்தில் மூன்று பெரிய நெருக்கடிகளை சமாளிக்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது:
அவை, துறைமுக தொழிலாளர் வேலைநிறுத்தம், மத்திய கிழக்கு பகுதிகளில் யுத்த வெடிப்பு, மற்றும் உள்ளூரில் ‘ஹரிகேன் ஹெலனின்’ பாதிப்புகள் காரணமாக மக்கள் பல்வேறு இடர்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
துறைமுக தொழிலாளர் வேலைநிறுத்தம் – தொழிலாளர்களுக்கு அவர் தெரிவித்த ஆதரவு, அவரை தொழிலாளர் மக்களின் பிரதிநிதியாக காட்டியது.
மத்திய கிழக்கில் யுத்த வெடிப்பு – ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய பின்னர், இஸ்ரேலின் பாதுகாப்பு உரிமையை வலியுறுத்திய அவரது உரை ஆணித்தரமாக இருந்தது.
ஹரிகேன் ஹெலனின் பாதிப்புகள் – ஜார்ஜியா மாநிலத்தில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, பிரார்த்தனையில் ஈடுபட்டது அவரது கருணைமிகு தலைவர் தன்மையை வெளிப்படுத்தியது.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் நபர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக செல்வாக்கை கொண்டிருப்பார். உலக அரசியல், பொருளாதாரம், மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகளை அவர் எடுப்பார்.
ஆக, இந்த தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
தற்போது அமெரிக்க அரசியலில், இரு கட்சிகளின் ஆதிக்கமே உள்ளது. நவீன காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அதிபர்களும் இந்த இரு கட்சியை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஜனாதிபதி ஜோ பைடன் இந்த தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்தபோது, கமலா ஹாரிஸ் அவருக்கு பதிலாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கினார். இந்திய வம்சாவளியுடைய கமலா ஹாரிஸ், அவரது கட்சியின் கொள்கைகள், அதாவது சிவில் உரிமைகள், சமூக பாதுகாப்பு, மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தீவிர நடவடிக்கைகள் ஆகியவற்றில் உறுதியான ஆதரவு பெற்றுள்ளார்.
இப்போது, கமலா ஹாரிஸுக்கு கிடைத்துள்ள மிக குறைந்த காலப்பகுதியில் அவர் தனது அரசியல் முதிர்ச்சியையும் தலைமைத்திறனையும் நிரூபிக்க வேண்டியுள்ளது. அக்டோபர் மாதம் முழுவதும், அவர் அதற்கான சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு உள்ளது.மிக குறைந்த வாக்கு சேகரிப்பு பிரச்சார நாட்களே அவருக்கு இருந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் தன் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்த இப்படி ஒரு வாய்ப்பை கமலா ஹாரிஸ் பெற்று இருப்பது டிரம்ப் அணியின் பழமைவாத அரசியல் கட்சியான குடியரசு கட்சிக்கு கதிகலங்கும்!
இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றால், அமெரிக்க அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாக அமையும்!